ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற திரைப்படங்களை இயக்கிய R.வெங்கட்டரமணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
போதைப்பொருள் கலாச்சாரத்தால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது மற்றும் அவர்களது குடும்பம் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை மையப்படுத்தி ‘முதற்கனல்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன், ஹரி, பாலாஜி, தீபாபத்மநாபன், உடன் டாக்டர்.சிவா, ராமசாமி, தனுஜா, ரோகிணி, சஜன், ருக்மணி, இலக்கியா, இந்த்ரா ராஜேந்திரன், பேபி தாரிகா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் வெங்கட்ட ரமணன் கூறும்போது, ”இன்று நாடெங்கிலும், ஏன் உலகெங்கிலும் போதைப் பொருள் பயன்பாடு அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. மதுவினால் ஏற்படும் போதை மற்றும் சீரழிவை விட இப்படிப்பட்ட சிந்தடிக் போதைப் பொருட்கள் இளைஞர்களின் வாழ்வை வெகு குறுகிய காலத்திலேயே சீரழித்து விடுகின்றன. அன்றாடம் போதைப்பொருள் வழக்குகள் குறித்து நாம் செய்திகளில் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, போதை மீட்பு மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது தான், பள்ளி செல்லும் இளைஞர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு போகும் வயதில் இருப்பவர்கள் என பலரும் இப்படி போதைப்பொருள் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி தங்களையே தொலைத்துவிட்ட அவலத்தை கண்கூடாக பார்க்க முடிந்தது.
அதனால் இந்த விஷயத்தையே ஏன் படமாக எடுக்க கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் விளைவாகத் தான் இந்த ‘முதற்கனல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. மது அருந்த பயப்படும் சிறுவர்கள், இளைஞர்கள் கூட, இது போன்ற போதை வஸ்துக்களை, அவை மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதாலும் யாரும் அறியாமல் பயன்படுத்துவது எளிது என்பதாலும் இதன் பிடியில் சுலபமாக சிக்குகின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் உளவியல் சிக்கல், அதனால் ஒவ்வொரு குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறோம்.
அதேசமயம் அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஒரு குடும்ப படமாக இது தயாராகியுள்ளது. படத்தில் நடித்திருக்கும் பலரும் புதுமுகங்கள் என்றாலும் இந்த கதைக்கு அவர்கள் தான் பொருத்தமாக இருந்தார்கள். படத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். நானும் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
