சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள அவரது 173வது படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நேற்று(ஜூன் 24) வெளியிடப்பட்டது. இதன்படி, இந்த படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜ் கமல் நிறுவனத்துடன் இணைந்து டர்மெரிக் மீடியா நிறுவனம் சார்பில் ஆர்.மகேந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: நான் என்ன பேசினாலும் பிரச்னையாகிவிடுகிறது. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள். பேசினால் இதோ பேசிவிட்டார் என அதற்கும் பிரச்னை செய்வார்கள். பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. அதே மாதிரி பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்.
இந்த படத்தை முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருந்தார். பிறகு சுந்தர்.சி படத்துக்குள் வந்தார். சில கமிட்மென்ட்களால் அவரால் தொடர முடியவில்லை. பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்க இருந்தார். அவர் சொன்ன கதை, நல்ல கதைதான். அதில் விஞ்ஞானி கேரக்டர். ஆப்கானிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படமாக்க வேண்டும். அந்த செயல்முறைக்கு நேரம் பிடிக்கும். அதன் பிறகே அஷ்வத் மாரிமுத்துவிடம் கதை கேட்டேன். பிடித்திருந்தது. இந்த படத்துக்கு நான் கதை கேட்க மாட்டேன்.
நீங்கள் என்ன முடிவு செய்தாலும் எனக்கு ஓகே என கமல்ஹாசன் சொல்லிவிட்டார். இது என்னடா இது, எல்லா பொறுப்பும் நம்ம தலையிலே விழுதேன்னு சொல்லி, நான்தான் கமலிடம், இல்லை கமல், நீங்களும் கதை கேளுங்க. நாம் சேர்ந்து முடிவு எடுப்போம்னு சொன்னேன். கமலுக்கும் கதை பிடித்துவிட்டது. பேட்ட படத்துக்கு பிறகு இதில் சிம்ரன் என்னுடன் நடிக்கிறார். எனக்கும் கமலுக்குமான நட்பு 1970களில் இருந்து தொடர்கிறது. இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தவர் கமல்ஹாசன்.
ஆடு புலி ஆட்டம் படத்தில் எனது தனிப்பட்ட ஸ்டைல்களை செய்ய ஆதரவு தந்தவர் கமல். இன்று அவர் தயாரிப்பில் நான் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். கமல்ஹாசன் பேசுகையில், ‘‘ஒரு சமயத்தில் இணைந்து நடிப்பதில்லை என நானும் ரஜினியும் முடிவு செய்தோம். அப்போதே நாங்கள் எடுத்த முடிவு என்னவென்றால், நாம் இணைந்து பணியாற்றும் படம் என்றால் ஒன்று நானோ, இல்லை நீங்களோதான் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அப்படி பேசியே 40 வருடம் கடந்துவிட்டது.
மறுபடி இந்த அலுவலகத்தைத் திறக்க வர வந்தபோது மாடியில் நின்று மறுபடி அதைப் பேசினோம். ஜாதகம் கிடைக்கும்வரை தேடுவதபோல தேடி இப்போது இரண்டு படம் செய்கிறோம். ஒன்று இது, இன்னொன்று நாங்கள் இணைந்து நடிக்கும் படம். இதில் எங்களுக்கு என்ன பெருமை என்றால் ஏவிஎம் வேப்பமரத்து நிழலில் பேசிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள், இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். யாருடைய கருணை என இருவருக்கும் தெரியாது. யாருடைய கருணை என்றாலும் இருவரும் தலைவணங்குகிறோம்.
வழக்கமாக படத்தின் தயாரிப்பாளர்தான் ஓடி ஆடி வேலை செய்வார். ஆனால் இதில் எல்லா வேலையும் செய்தது இவர் (ரஜினி) தான். நான் சும்மா வேடிக்கை மட்டுமே. இந்த எல்லாப் பொறுப்பும் இப்போது அந்த இயக்குநருக்கு வந்திருக்கும். அவரை நான் பயமுறுத்தவில்லை. உங்களுக்கு பக்கபலம் இருப்போம் என்பதற்காக சொல்கிறேன்’’ என்றார்
விழாவில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, ‘‘இது 5 ரூபாய் மருத்துவரை பற்றிய படம் கிடையாது. தர்மன் என்ற மருத்துவரின் ஸ்வாக் ஆன பேமிலி எண்டெர்டெயினராக படம் உருவாகிறது. கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ என்ற படம் அனைவருக்கும் பிடிக்கும். அதுபோன்ற ஒரு படம் இது. சிம்ரன், ராசி கன்னா நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார்’’ என்றார்.
