2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராவார்: வினோதினி உறுதி

சென்னை: நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வரும் நடிகையும், எழுத்தாளருமான வினோதினி வைத்தியநாதன் அளித்த பேட்டி பின்வருமாறு: மயிலாப்பூர், கோவை தெற்கு, அவிநாசி, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளுக்கு சென்று பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். நான் நினைத்ததை விட களத்தில் திமுகவுக்கு அதிக ஆதரவு உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும். கண்டிப்பாக மு.க.ஸ்டாலின் 2வது முறையாக முதல்வர் ஆவார்.

நான் பிரசாரம் செய்த அனைத்து தொகுதிகளிலும் திமுக முதலிடத்திலும், அதிமுக 2வது இடத்திலும் மற்ற கட்சிகளுக்கு அடுத்தடுத்த இடங்கள் உள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்பது நான் சென்ற தொகுதிகளின் கள நிலவரம் போதுமானது. இந்த தேர்தலுக்காக முதலில் தீவிர பிரசாரத்தில் இறங்கியது திமுக கூட்டணியில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் தான். ஒவ்வொரு தொகுதியிலும் பாரம்பரிய மரபின்படி வாக்களிப்பவர்கள் மட்டுமல்லாமல் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் 2 முதல் 3 வாக்குகள் திமுகவுக்கு உள்ளது.

கலைஞரை 5 முறை முதலமைச்சர் ஆக்கியுள்ளோம். அதனால் தமிழர்கள் தெளிவானவர்கள். ஒரு பக்கம் பகுத்தறிவு பேசினாலும் மறுபக்கம் தீவிர கடவுள் நம்பிக்கையும் இந்த அறிவார்ந்த தமிழ் சமூகத்தில் இருக்கிறது. அதே நேரத்தில், மக்களிடையே வேற்றுமை பார்க்கும் குணமில்லை. இதுபோன்ற வாக்காளர்கள் இருக்கும் வரை திமுக தான் ஆட்சியில் இருக்கும். தவெகவை பொறுத்தவரை பல தொகுதிகளில் அக்கட்சியின் தலைவர் விஜய் நேரடியாக பிரசாரம் செய்யவில்லை. வேட்பாளர்கள் தனியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சில இடங்களில் விஜய்யின் கட்அவுட் வைத்தும், ஹாலோகிராம் தொழில்நுட்பம் மூலமும், முழு உருவ பொம்மைகள் கொண்டும், ரோபோ வைத்தும் பிரசாரம் செய்து வந்தனர். அது துளியளவும் பலனளிக்காது. தவறு எங்கு நடக்கிறதோ அதை பற்றி பேசுவதற்கு பதிலாக அனைத்திற்கும் திமுகவை காரணம் காட்டி வருகிறார் விஜய். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுகவை குறை சொல்லும் அவர் பாஜவை சுமூகமாக டீல் செய்து வருகிறார். இதனால் விஜய் பாஜவால் இயக்கப்படுகிறாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சில கேள்விகளுக்கு தேர்தலுக்கு பிறகு வெளியாகும் தகவல்கள் மூலம் நமக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

* அரசியல் மாண்பை குறைத்த விஜய், அண்ணாமலை
சில நாட்களுக்கு முன் தனது எக்ஸ் தளத்தில் வினோதினி வெளியிட்ட பதிவில், ‘‘இன்று தவெக நடத்தும் நாடகங்களை பார்க்கும்போது, தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்ற அச்சம் மக்களிடத்தில் உள்ளது. 10 வருடம், ஏன் 5 வருடம் முன்புகூட இத்தனை கேவலமான அரசியல் செயல்பாடுகள் இங்கு இல்லை. தமிழ்நாட்டு அரசியல் மாண்பைக் குறைத்து சிதைத்ததில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் அண்ணாமலை, மற்றொருவர் விஜய்’’ என்று தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

Related Stories: