ஆறுகளில் பெருகிவரும் தண்ணீர்
ஆறுகளில் பெருகிவரும் தண்ணீரை, ஆரவாரத்தோடு வரவேற்று, அன்போடு உபசரித்து, வணங்கி வழிபட்டு, சீர் செய்து சீர் பெறும் நாள்தான் ஆடி 18. தமிழர் வாழ்வியலில் நீரே உயிர்; நதியே நாகரிகம். பருவ மழையால் நிரம்பி வழியும் ஆறுகளை வெறும் இயற்கைக் காட்சியாகப் பார்க்காமல், உயிர் வழங்கும் தாயாகக் கண்டு வரவேற்றனர் நம் முன்னோர்கள். பெருகி வரும் நீரை ஆரவாரத்தோடு வரவேற்று, அன்போடு உபசரித்து, வணங்கி வழிபட்டு, அதன் அருளால் வளமான வாழ்வு அமைய வேண்டி பிரார்த்தனை செய்யும் திருநாளே ஆடி பதினெட்டாம் பெருக்கு. இயற்கையை மதித்து, நீருக்கு நன்றியறிதல் செலுத்தி, வளமும் நலனும் பெறும் பண்பாட்டுத் திருநாளாக இது விளங்குகிறது. வாழ்வியலோடு கலந்த உன்னத நாள் ஆடி 18.
காவேரித் தாயின் முதன்மை:
ஆடிப் பெருக்கு விழா தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆறு, குளம் மற்றும் ஏரிக் கரைகளில் கொண்டாடப்பட்டாலும், அது அடிப்படையில் காவேரி அன்னையைப் போற்றி ஆராதிக்கும் ஒரு புனித விழாவாகவே கருதப்படுகிறது. “காவேரி சர்வநதீஸ்வரூபிணி’’ என்றே சாஸ்திரங்கள் கூறுகின்றன. கங்கையின் புனிதமான காவேரி என்பது தொண்டரடிபொடியாழ்வார் பாசுரம். புராணங்களின்படி, ஆடிப் பதினெட்டாம் பெருக்கு அன்று கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட அனைத்துப் புண்ணிய நதிகளும் காவேரி நதியில் சங்கமிப்பதாகவும், அதே வேளையில் காவேரி தேவி மற்ற அனைத்து நீர்நிலைகளிலும் பிரசன்னமாகி அருள்பாலிப்பதாகவும் நம்பப்படுகிறது. எந்த நதிக் கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டாலும், அது உண்மையில் காவேரி அன்னைக்குச் செலுத்தப்படும் மரியாதையும் நன்றியறிதலும் ஆகும்.
பூம்புகார்
காவிரி என்பது வெறும் நதி அல்ல; தமிழர் நாகரிகத்தையும், வேளாண் வளத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாயாகவே தமிழிலக்கியங்கள் அவளைப் போற்றுகின்றன. காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் புனிதத் தலம் காவேரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) எனப் போற்றப் படுகிறது. இவ்விடம் “சங்குமுகம்’’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆறு கடலோடு சங்கமிக்கும் இத்தலம் தொன்றுதொட்டு புனித தீர்த்தமாகக் கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து புண்ணியம் பெறுகின்றனர். காவிரியின் வளத்தையும், அழகையும், உயிர்ப்பையும் தமிழ்க் காப்பியங்கள் போற்றிப் பாடுகின்றன. குறிப்பாக இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தில், காவிரியின் செழிப்பை இனிமையாக வர்ணிக்கிறார்;
“பூவிரி மதுகரம் நுகரவும், பொருகயல்
இரு கரை புரளவும், காவிரி எனவரும்
மடநவீர் கனக நெடுங்கடை திறமினே’’
இந்தப் பாடலில், மலர்களில் தேனை உண்டு வண்டுகள் முரலுவதும், நீர் பெருக்கால் கயல் மீன்கள் இரு கரைகளிலும் துள்ளி விளையாடுவதும், என்ற காட்சிகளைக் காட்டி,பொன்னுக்கு நிகரான செல்வத்தை வாரி வழங்கும் காவிரியின் வளமையை கவிஞர் கண்முன் நிறுத்துகிறார்.
அம்மா மண்டபமும் ஆடிப்பெருக்கு சீரும்
ஆடிப் பெருக்கு அன்று ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, காவிரியின் கரையில் அமைந்துள்ள அம்மா மண்டபப் படித்துறைக்கு எழுந்தருளுவார். ரங்கநாதரின் சார்பில், கோயில் யானையின் மீது பட்டு வஸ்திரங்கள், தாலிப்பொட்டு, மாங்கல்ய சரடு, பழங்கள், வாசனை திரவியங்கள் போன்ற சகல சீர்வரிசைகளும் கொண்டுவரப்பட்டு காவிரித் தாய்க்குச் சமர்ப்பிக்கப்படும். தன்னுடைய தங்கையாகக் கருதப்படும் காவிரிக்கு, பெருமாளே சீர் கொடுப்பதாகக் கருதப்படும் இந்நிகழ்வு பக்தர்களைச் சிலிர்க்க வைக்கும் ஒரு தெய்வீக வைபவம்.
மங்கள ஸ்லோகம்
ஆடி 18ம் நாளை, காவேரியோடும், ஸ்ரீ ரங்கநாதரோடும் இணைக்கும் ஸ்லோகம் ஒன்று உண்டு.
“காவேரீ வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ:
ஸ்ரீ ரங்கநாதோ ஜயது ஸ்ரீ ரங்க ஸ்ரீ ஸ்ச வர்த்ததாம்’’
இதன் ஆழமான பொருள்
காவிரி நதியானது எப்போதும் வற்றாமல், பயிர்களுக்கும் உயிர்களுக்கும் வளம் சேர்க்கப் பெருகி ஓடட்டும்!மழையின் அதிபதியான இந்திரன் (வாஸவன்), உரிய காலங்களில் தவறாமல் மழை பொழியட்டும்! அகில உலகத்தையும் காக்கும் ஸ்ரீ ரங்கநாதன் எப்போதும் வெற்றி பெற்று அருளட்டும்! திருவரங்கத்தின் ஆன்மிகச் செல்வமும், மக்களின் மங்களமும் சுபிட்சமும் நாளுக்கு நாள் வளரட்டும்! இயற்கை, மழை, இறைவன், ஊர் வளம் என அனைத்தின் நலனையும் உள்ளடக்கிய ஒரு உலகளாவிய பிரார்த்தனையாக இந்த ஸ்லோகம் திகழ்கிறது.
முளைப்பாலிகை
ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழாவின் முக்கிய அங்கங்களில் ஒன்று முளைப்பாலிகை ஆகும். ஆடிப்பெருக்கிற்கு சில நாட்களுக்கு முன்பாக நவதானியங்களைச் சிறிய பாலிகைத் தட்டுகளில் விதைத்து முளைக்கச் செய்வார்கள். இந்த முளைகள் செழித்து வளர்வது, வரவிருக்கும் வேளாண் ஆண்டில் நல்ல விளைச்சலும் வளமையும் பெருகும் என்பதற்கான மங்களச் சின்னமாகக் கருதப்படுகிறது. ஆடி பதினெட்டாம் நாள் பிற்பகலில், பெண்கள் முளைப்பாலிகைகளைத் தலையில் சுமந்தோ, கைகளில் ஏந்தியோ ஊர்வலமாக ஆற்றங்கரைக்குச் செல்கின்றனர். அங்கு பசுஞ்சாணத்தால் விநாயகரைப் பிடித்து வைத்து வழிபடுவது மரபு.
பின்னர் முளைப்பாலிகைகளை வரிசையாக அடுக்கி வைத்து, தலைவாழையி லையில் பச்சரிசியையும் வெல்லத்தையும் கலந்து நிவேதனமாகப் படைக் கின்றனர். அதனுடன் காதோலை, கருகமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம், காப்பரிசி போன்ற மங்கலப் பொருட்களையும் சமர்ப்பிக்கின்றனர். தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி காட்டி காவேரி அன்னையையும் நதித்தெய்வங்களையும் மனமுருகி வழிபடுகின்றனர். வழிபாடு நிறை வடைந்த பின்னர், முளைப்பாலிகைகளை ஆற்றில் விடுவது வழக்கம். இது விதைத்த விதை போல் வாழ்க்கையும் செழித்து வளர வேண்டும்; வயல்களில் பசுமை பெருக வேண்டும்; மழை வளமாகப் பெய்து நாட்டில் வளமும் நலமும் நிலவ வேண்டும் என்ற மக்களின் ஆழ்ந்த பிரார்த்தனையின் அடையாளமாகும்.
தாலிப்பெருக்கு
ஆடிப்பதினெட்டாம் பெருக்கு தினத்தில் சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யக் கயிற்றை மாற்றிக்கொள்வது தொன்றுதொட்டு நிலவி வரும் மங்கல மரபாகும். திருமணம், சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் என வாழ்க்கையின் பல்வேறு மங்கள நிகழ்வுகளிலும் மாங்கல்யத்தை அணிந்துகொள்ளும் பாக்கியம் தொடர்ந்து கிட்ட வேண்டும் என்று காவேரி அன்னையை வேண்டிக்கொண்டு, புதிய மஞ்சள் கயிற்றில் மாங்கல்யத்தை அணிந்துகொள்கின்றனர்.மூத்த சுமங்கலி ஒருவர், அங்கு கூடியிருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய புனித நூலை வழங்குவார். சிலர் கழுத்திலும், சிலர் கைகளிலும் கட்டிக்கொள்வார்கள். அதன்பின், தாங்கள் கொண்டு வந்த முளைப்பாலிகைகள், பனை ஓலையால் செய்யப் பட்ட வட்டமான காதோலை, கருகமணி போன்ற மங்களப் பொருட்களை நதியில் சமர்ப்பிக்கின்றனர்.
வழிபாடு முடிந்ததும், நிவேதனமாகப் படைக்கப்பட்ட பச்சரிசி-வெல்லக் கலவையை அங்கு வந்திருப்போருக்கு பிரசாதமாக வழங்குவர். பல குடும்பங்கள் தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட சித்ரான்னங்களை எடுத்துவந்து ஆற்றங்கரையிலேயே உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து உண்டு, விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். “ஆடிப்பெருக்கு தாலிப் பெருக்கு’’ என்ற பழமொழி, இந்நாளின் மங்களப் பெருமையை எடுத்து ரைக்கிறது. ஆடிப்பதினெட்டாம் நாள் கிடைக்கும் இன்பமும் வளமும் மாங்கல்யமும், ஆண்டு முழுவதும் குடும்பத்தில் பெருகி நிலைத்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு தமிழர்கள் இந்த விழாவை தலைமுறை தலைமுறையாக அனுசரித்து வருகின்றனர்.
ஆடிப்பூரம் திருவாடிப்பூரத்தின் பெருமை
இதுவரை ஆடிப்பதினெட்டாம் பெருக்கின் சிறப்புகளைக் கண்டோம். இனி, ஆடி மாதத்தின் மற்றொரு மகத்தான வைபவமான திருவாடிப்பூரத்தின் பெருமையைக் காண்போம். இந்த ஆண்டு திருவாடிப்பூரம் 14.08.2026, வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், அன்றே ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் அமைந்துள்ளது. இதனால் இந்நாள் பல்வேறு மங்கள அம்சங்கள் ஒன்றிணைந்த அரிய நாளாக விளங்குகிறது. பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்குரிய கிழமையும் வெள்ளிக்கிழமை. மேலும் சுக்கிரனின் அதிதேவதை ஸ்ரீ மகாலட்சுமி. ஆகவே, பூரம் நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும், மகாலட்சுமியின் அருளும் ஒருங்கே சங்கமிக்கும் அரிய திருநாளாக இந்த ஆண்டின் திரு வாடிப்பூரம் அமைந்துள்ளது.
ஆண்டாளும் ஆடிப்பூரமும்
ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம், வைணவ சமயத்தில் திருவாடிப் பூரம் எனப் போற்றப்படுகிறது. இது சாதாரண நட்சத்திர நாள் அல்ல; ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அவதரித்த திருநட்சத்திரம் என்பதால், திவ்ய தேசங்கள் அனைத்திலும் மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்படும் மங்கள நாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள், திருவில்லிபுத்தூரில் திருத்துளசிச் செடியின் அடியில் தெய்வக் குழந்தையாக அவதரித்தாள். பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) அந்தத் திருக்குழந்தையைக் கண்டெடுத்து, “கோதை’’ என்ற திருநாமம் சூட்டி, பகவத் பக்தியிலும் வேத-தமிழ் மரபிலும் வளர்த்தார். கோதை நாச்சியார் சிறுவயது முதலே ஸ்ரீ மந்நாராயணனையே தம் மணவாளனாக வரித்துக் கொண்டார். எம்பெருமானுக்காகப் பெரியாழ்வார் கட்டிய மலர்களால் ஆன மாலையை முதலில் தாம் அணிந்து பார்த்துவிட்டு, பின்னர் பெரு மானுக்குச் சாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதனை அறிந்த பெரியாழ்வார் வருந்தியபோது, “கோதை சூடிக் கொடுத்த மாலையே எனக்கு உகந்தது’’ என்று எம்பெருமானே அருளிச்செய்தார். அதனால் ஆண்டாள் “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’’, “ஆண்டாள்’’ என்ற திருநாமங்களைப் பெற்றார். ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பது பாசுரங்களும், நாச்சியார் திருமொழி நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்களும் வைணவ சமயத்தின் அரிய பொக்கிஷங்களாக விளங்குகின்றன. திருப்பாவை பக்திக்கும் சரணாகதிக்கும் வழிகாட்டும் வேதசாரமாகத் திகழ்கிறது; நாச்சியார் திருமொழி, பரமபக்தியின் உச்சநிலையை வெளிப்படுத்தும் அருள்நூலாகப் போற்றப்படுகிறது.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆடிப்பூரம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் உடனுறை ரெங்கமன்னார் திருக் கோயிலில், ஆடிப்பூரப் பெருவிழா சுமார் 12 நாட்கள் மிகுந்த விமரிசை யாகக் கொண்டாடப்படுகிறது. 6.8.26 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகன ஊர்வலங்களும், ஆன்மிக நிகழ்வுகளும் நடைபெறும். கொடியேற்ற நாளில் இரவில் ஆண்டாளும் ரெங்கமன்னாரும் 16 சக்கரங்கள் கொண்ட மாபெரும் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஐந்தாம் நாள் அதாவது 10.8.2026 திங்கள் கிழமை “ஐந்து கருட சேவை’’ மிகவும் முக்கியமான வைபவமாகும் காலையில் பெரியாழ்வாருக்குச் சிறப்பு மரியாதைகள் நடைபெறும் இரவில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோருடன் ஸ்ரீ வில்லி புத்தூர் சுற்றியுள்ள திவ்யதேசப் பெருமாள்கள் ஒரே நேரத்தில் ஐந்து கருட வாகனங்களில் எழுந்தருளி உலா வரும் அரிய, கண் கொள்ளாக் காட்சி நடைபெறும்.
ஸ்ரீ ரங்கத்திலும் பிற தலங்களிலும் ஆடிப்பூரம்
ஆண்டாளின் அவதாரத் திருநாளான ஆடிப்பூரம், வைணவத் திருத்தலங்கள் அனைத்திலும் மிகுந்த கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஸ்ரீ ரங்கத்தில் உள் ஆண்டாள், வெளி ஆண்டாள் என இரு சந்நதிகள் உள்ளன. ஆடிப்பூரத் திருநாளில் வடதிருக் காவிரியிலிருந்து (கொள்ளிடம்) புனிதநீர் யானை மீது கொண்டு வரப்பட்டு ஆண்டாளுக்குச் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். அன்று ஆண்டாள் ‘திருக்கல்யாண திருக்கோலத்திலும்’, வீணையேந்திய ‘பரகாலநாயகி’ அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். திருவல்லிக்கேணி (சென்னை) – ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில் ஆண்டாள் சந்நதியில் 10 நாட்கள் ஆடிப்பூரப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். விழா நாட்களில் தினசரி மாலை ஆண்டாள் பல்வேறு வாகனங்களில் உலா வருவார். ஆடிப்பூரத்தன்று மாலையில் பார்த்தசாரதிப் பெருமாளும் ஆண்டாளும் இணைந்து மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
திருமலையில் ஆடிப்பூரம்
மன்னார்குடி – ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயில் ஆடிப்பூர விழா 10 நாட்கள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள ஆண்டாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்களும், பூச்சொரிதலும் நடைபெறும். ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்கு வளைகாப்பு வைபவம் வெகுசிறப்பாக நடக்கும். கும்பகோணம் – ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோவிலில் 3 நாட்கள் ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீ சார்ங்கபாணி மற்றும் ஆண்டாளுக்குப்பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருமலையில் ஆடிப் பூரத்தன்று ஸ்ரீ வாரி (ஏழுமலையான்) கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும், கீழத்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் உள்ள ஆண்டாள் சந்நதியிலும் ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் – பெருமாள் மாலை மாற்றும் வைபவமும், வளையல் பிரசாத விநியோகமும் நடைபெறும்.
திருச்சி மலைக்கோட்டை – மட்டுவார்குழலம்மன் ஆடிப்பூர வைபவம்
திருச்சி மலைக்கோட்டையில் அருள்பாலிக்கும் அருள்மிகு தாயுமான சுவாமி – மட்டுவார்குழலம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெறும் உற்சவ நாட்களில் மட்டுவார் குழலம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், வளைகாப்பு, ஊஞ்சல் உற்சவம், வீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன. குறிப்பாக, திருவாடிப்பூரத் திருநாளில் அம்மனுக்குச் சிறப்பு வளைகாப்பு நடத்தப்படுவது ஆயிரக்கணக்கான பெண்களை ஈர்க்கும் மங்கள நிகழ்வாகும்.இவ்விழாவின் தனிச்சிறப்பாக, இரவு வேளையில் மட்டுவார்குழலம்மன் தனியாகத் தேரில் எழுந்தருளி, மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் பவனி வருவது குறிப் பிடத்தக்கது.
சிவபெருமான் இல்லாமல் அம்பிகை மட்டும் தனித்தேரில் எழுந்தருளும் இந்த உற்சவம், தமிழக சிவாலயங்களில் அரிதாகக் காணப்படும் .ஊஞ்சல் உற்சவமும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்ளும் முக்கிய வைபவமாக விளங்குகிறது.தாயுமானசுவாமி, கருவுற்ற பெண்ணுக் குத் தாயாக வந்து அருள்புரிந்த தலத்தில், தாய்மையின் திருவுருவமாக விளங்கும் மட்டுவார் குழலம்மனுக்கு நடைபெறும் ஆடிப்பூர வைபவம், அன்னையின் கருணையை நினைவூட்டும் அரிய திருவிழாவாகத் திகழ்கிறது.
