திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு: ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

 

 

தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், நேற்று மதியம் சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் வழியாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, மின்சார ரயிலின் படிக்கட்டு கம்பி உடைந்து, நடைமேடையின் பக்கவாட்டு சுவரில் உராய்ந்தது. இதனால், பலத்த சத்தம் கேட்டதால், அருகில் நின்றிருந்த பயணிகள் அலறியடித்து உள்ளே ஓடினர். அதைத் தொடர்ந்து, அந்த மின்சார ரயில் தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் ஆகிய ரயில் நிலையத்திலும் இதே போல் உரசி சென்றதால், சத்தம் கேட்டு மின்சார ரயிலின் ஓட்டுனருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இந்த மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கினர். உடனடியாக ரயில்வே ஊழியர்கள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடம் வரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு அதனை சரி செய்தனர். அதைத் தொடர்ந்து மின்சார ரயில் இயக்கப்பட்டது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த ரயில்கள் சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: