×

மிருகண்டா அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது: கடும் வறட்சியால் ஆடி 18ல் விதை விட முடியாமல் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்: பாலைவனமாக மாறிய செய்யாறு

 

 

கலசபாக்கம், ஆக. 4: மிருகண்டா அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் கடும் வறட்சி ஏற்பட்டு ஆடி 18ல் விதை நட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். செய்யாறும் பாலைவனமாக மாறிவிட்டது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பது விவசாய பழமொழியாகும். ஆடி மாதத்தில் பெய்யும் பருவ மழை மற்றும் மிதமான தட்பவெப்ப நிலை பயிர்கள் மிக சிறப்பாக வளர்வதற்கு ஏதுவாக இருக்கும். நெல் உற்பத்தியில் தமிழகத்தில் 2வது மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. கடந்த 5 ஆண்டு காலமாக செய்யாற்றில் தண்ணீர் சென்றது. இதனால் விவசாய கிணறுகள் ஏரிகள் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வந்தது. கடந்த 4 மாத காலமாக செய்யாறு பாலைவனமாக மாறியது.

கலசபாக்கம் பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையில் கடந்த 5 ஆண்டுகாலமாக தண்ணீர் இருந்ததால் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் 3191 ஏக்கர் பரப்பளவு விவசாயிகள் பயன்பெற்றனர். உணவு உற்பத்தி அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் விவசாய பாசனத்திற்கு திறந்து விட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் சொர்ணா வாரி பருவம் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் போதிய அளவிற்கு மகசூல் இல்லாததால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் நெற்பயிர் காய்ந்து கருகி உள்ளதால் நெற்பயிர்களை மாடு விட்டு மேய்க்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இருக்கும் நகைகளை அடகு வைத்தும், கடன்களை வாங்கியும் பயிர் வைத்து, இப்படி கால்நடைகளுக்கு பயிர்கள் உணவாகுவதை எண்ணி விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

நெல் விலை உயர்ந்தாலும் கூட மகசூல் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லாததால் மணம் வீசும் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் பூந்தோட்டத்தில் கால்நடைகளை மேய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மலர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18ல் சம்பா பருவத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் விதை நடவு செய்வார்கள். பயிர் செழித்துவளர்ந்து உணவு உற்பத்தி அதிகரிப்பது வழக்கம். அதன்படி நேற்று ஆடி 18. ஆனால் தற்போது கடும் வறட்சியின் காரணமாக நீர் நிலைகள் வறண்டு போய் உள்ளது. போதிய தண்ணீர் இல்லாததாலும் ஆடி 18ல் விதை விட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.

ஆடி மாதம் தொடக்கம் முதலே மழை இல்லாததால் மணம் வீசும் மலர்கள் மற்றும் இனிக்கும் கரும்பு தோட்டங்களும் காய்ந்து கருகியது. இப்பகுதி விவசாயிகள் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லாததால் ஆடி 18 விதை விடவில்லை. இதனால் விவசாய பணிகள் முடங்கி உணவு உற்பத்தி பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி தேர்தல் நேரத்தில் சொன்னபடி விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிடவும் கூட்டுறவு வங்கிகளில் மானியத்துடன் விவசாய கடன் மற்றும் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணை சீரமைப்பு பணிகள் முடங்கியது
கலசபாக்கத்தில் உள்ள மிருகண்டா அணை திமுக ஆட்சியில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மதகு சீரமைத்தல், கரை பலப்படுத்தும் பணிகள், அணைக்கட்டு சீரமைக்கும் பணி, நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள ரூ.14 கோடியில் பணி மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இப்பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தொழிலாளர்கள் பாதிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஜூலை 1ம் தேதி முதல் விபிஜி ராம்ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்போது இந்த திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணிகள் மட்டும் நடைபெறுகின்றன. குறைந்த அளவு தொழிலாளர்கள் மட்டும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்காததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது விவசாய பணிகள் இல்லாததால் கூடுதலாக தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags : Mriganda dam ,Aadi 18 ,Cheyyar ,Kalasapakkam ,
× RELATED ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு இரவில்...