புதுச்சேரி அருகே படகு விபத்தில் உயிரிழந்த மீனவரின் உடலை மாற்றி அடையாளம் காட்டிய உறவினர்கள்

*இறுதிச் சடங்கின்போது குடும்பத்தினர் அதிர்ச்சி

காலாப்பட்டு : படகு விபத்தில் உயிரிழந்த மீனவரின் உடலை மாற்றி உறவினர்கள் அடையாளம் காட்டிய நிலையில், இறுதிச் சடங்கின்போது உடலை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் சின்னமுதலியார்சாவடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர்களான விநாயகம்(60) பலராமன், ஐயனாரப்பன் ஆகிய 3 பேரும், பலராமனுக்கு சொந்தமான படகில் நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி படகு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் நிலை தடுமாறி கடலில் விழுந்த விநாயகம்(60) மீது படகு விழுந்துள்ளது. இவ்விபத்தில் விநாயகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடன் சென்ற பலராமன், ஐயனாரப்பன் ஆகியோர் விநாயகத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை புதுச்சேரி கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு விநாயகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில், போலீசார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் உடலை அடையாளம் காட்டினர்.

அதன் அடிப்படையில் மருத்துவர்களால் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து வீட்டில் இறுதி சடங்கின்போது, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது படகு விபத்தில் உயிரிழந்த விநாயகத்தின் உடல் இல்லை என்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் அங்கு வந்து, அந்த உடலை மீட்டு, கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில், உறவினர்களிடம் ஒப்படைத்தது கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்குப்பம் கடற்கரையில் ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் பிணம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பிரேத பரிசோதனை கிடங்கில் இருந்த விநாயகம் உடலை எடுத்து பிரேத பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: