*குல தெய்வ கோயிலுக்கு சென்று திரும்புகையில் பரிதாபம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே நேற்று நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதியதில் தம்பதியர்,2 மகள்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குல தெய்வ கோயிலுக்கு சென்று திரும்பிய போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை எம்எல்ஏ வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (45).தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூரணி என்கின்ற உமா மகேஸ்வரி (39) இவர்களது மகள்கள் ஆர்த்தி (25) பிசியோதெரபிஸ்ட் படிப்பு முடித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.
இளைய மகள் நர்மதா (20). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்களது தூரத்து உறவினர் ராமன் (35). நேற்று இவர்கள் 5 பேரும் ஒரே காரில் உடுமலை அருகே உள்ள குல தெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
சாமி தரிசனம் செய்து விட்டு மதியம் காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். காரை கனகராஜ் ஓட்டினார். மதியம் 2 மணி அளவில் பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலையில் டிடைவர் பகுதியில் நடப்பட்டிருந்த மலர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியின் மீது கார் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த கனகராஜ், ராமன், பின் சீட்டில் அமர்ந்திருந்த பூரணி,ஆர்த்தி, நர்மதா ஆகிய 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கோமங்கலம் போலீசார், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் இடிபாடுகளிடையே சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கோமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது கனகராஜ் உள்ளிட்ட ஐந்து பேரும் உடுமலை அருகே உள்ள குல தெய்வம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.
நல்லாம்பள்ளி அருகே சென்ற போது சாலையோரம் சாலை மையத் தடுப்பில்(சென்டர் மீடியன்) உள்ள மலர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி,2 மகள்கள் மற்றும் உறவினருடன் உயிரிழந்த சம்பவம் மதுக்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூங்கியதால் நடந்ததா?
பொள்ளாச்சி அருகே ஆட்சிபட்டியில் இருந்து திண்டுக்கல் வரையிலான என்.ஹெச் 83 வழித்தட தேசிய நெடுஞ்சாலை பணி அண்மையில் நிறைவடைந்தது.4 வழிச்சாலையாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலையின் இருபுறம் மற்றும் சென்டர் மீடியன் பகுதிகளில் மலர் செடிகள் நடப்பட்டு அதனை பராமரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. நல்லாம் பள்ளி பிரிவு வழியாக செல்லும் திண்டுக்கல் சாலையின் நடுவே நடப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
அதிகாலை நேரத்தில் கோயிலுக்கு காரில் சென்று விட்டு, மீண்டும் மதியமே வீடு திரும்பிய போது சென்டர் மீடியனை ஒட்டி நின்றிருந்த லாரியை டிரைவர் கவனிக்காததால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இது போன்ற விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
