×

இன்ஸ்டா காதலியை எரித்து கொன்ற கள்ளக்காதலன் கைது

ஈரோடு: ஈரோட்டில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இன்ஸ்டா காதலியை எரித்துக்கொன்ற வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மூலப்பாளையம் பாரதி நகர் 3வது வீதியை சேர்ந்தவர் வினோதினி (24). கடந்த 5 ஆண்டுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்பவரை திருமணம் செய்தார். சூர்யா திருப்பூரில் டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு தனிஷ் (4) என்ற மகன் உள்ளார். வினோதினி திருப்பூரில் இருந்த போது இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடி அரண்மனை தெருவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (26) என்பவருடன் பழக துவங்கினார். இந்நிலையில், வினோதினிக்கும், சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, இரண்டு ஆண்டுக்கு முன்பாக கணவரை பிரிந்து மகனுடன் ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீடு திரும்பினார்.

பின்னர், பெற்றோரின் வீடு அருகே மற்றொரு வீட்டில் வினோதினி வசித்து வந்தார். இவருக்கும், நவநீதகிருஷ்ணனுடன் இருந்த பழக்கம், நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. அப்போது நவநீதகிருஷ்ணன் நடவடிக்கை பிடிக்காததால், சில நாட்களாக வினோதினி அவருடன் சரிவர பேசாமல் இருந்தார். வினோதினி வேறு நபருடன் பழகி வருவதாக நவநீதகிருஷ்ணன் சந்தேகம் அடைந்து, வினோதினியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 28ம் தேதி, நள்ளிரவு வீட்டில் மகனுடன் வினோதினி இருப்பதை உறுதி செய்த நவநீதகிருஷ்ணன், வீட்டிற்குள் நுழைந்து வினோதினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆத்திரம் அடைந்த அவர், வீட்டிற்குள் இருந்த மண்ணெண்ணெய்யை வினோதினி மீது ஊற்றி தீ வைத்தார். இதில், வினோதினி உடலில் தீ பரவியது. மேலும், வலி மற்றும் வேதனையுடன் அவர் தீப்பற்றி எரிந்த உடலோடு நவநீதகிருஷ்ணனை கட்டி பிடித்தார்.

இதில், வினோதினி, நவநீத கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. வினோதினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 29ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். ஈரோடு தாலுகா போலீசார், கொலை வழக்காக பதிவு செய்தனர். தீக்காயங்களுடன் உயிர் தப்பிய நவநீதகிருஷ்ணன், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், போலீசார் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் நேற்று கைது செய்யப்பட்டதாக ஈரோடு தாலுகா போலீசார் தெரிவித்தனர்.

Tags : Erode ,Vinodini ,Bharati Nagar 3rd Street, Erode Mulpalappalayam ,Surya ,Tiruppur district ,
× RELATED ரவுடி கொலை வழக்கில் வாலிபர் கைது:...