சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக விவசாயிகளின் உணர்வைப் புரிந்து அவர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பது நியாயமானது. இதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே கொடுத்த உத்தரவின்படி தண்ணீர் திறக்க மறுத்து மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் நியாயமற்ற போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழகத்திற்கான காவிரி நீர் தமிழக விவசாயிகளின் பயிர் தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் மிக மிக அவசரமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட. எனவே கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
