×

5 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட சிவலிங்க சிலை மீண்டும் ஒப்படைப்பு: திருப்போரூர் அருகே பரபரப்பு

 

திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் மானாம்பதி அருகே தட்சணாவரம் கிராமம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தனி நபர்களால் திடீரென சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டது. இதற்கு அந்த பகுதியின் ஒரு சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரிடம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமான சர்ச்சைக்கு உரிய இடம் என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து சிவலிங்கம் அகற்றப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சிவலிங்கத்தை நிர்மாணித்த கோதண்டன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சிவலிங்க சிலையை தன்னிடம் ஒப்படைக்க கோரினார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் சிவலிங்க சிலையை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தனியாருக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய இடத்தில் மீண்டும் சிலையை வைக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று சிலை வேறொரு இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. 5 ஆண்டுகள் கழித்து வழக்கில் வெற்றி பெற்று மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் உள்ளூர் கிராம மக்கள் வந்து ஆர்வத்துடன் சிவனை வழிபட்டனர். அங்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Sivalinga ,Tiruporur ,Thiruporur ,Dachanavaram ,Manampathi ,Thirukkalkhundream ,Patta land ,
× RELATED இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு...