முதல்வரின் அலுவலகம், பல்வேறு துறைகள் மாற்றம் செய்யப்படுவதற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு: பட்ஜெட் பணிகள் பாதிக்கும் அபாயம்

 

சென்னை: முதல்வரின் அலுவலகம் மற்றும் பல்வேறு துறைகள் இடம் மாற்றம் செய்யப்படுவதற்கு தலைமைச் செயலக சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பட்ஜெட் பணிகள் பாதிக்கும் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்துக்கு இடம் மாறுவதை வரவேற்கிறோம். ஆனால் நடைமுறையில் உள்ள சிக்கல்களை முதல்வர் கவனிக்க வேண்டும். நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் வணிகவரி, பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை, உள்துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகையின் பல்வேறு தளங்களில் உள்ள கூட்ட அரங்கங்களிலும், உணவறைகளிலும் இடமாற்றம் செய்வது ஏற்புடையதல்ல. ஏனெனில், இங்கு பணியாளர்கள் பணியாற்றுவதற்கு தேவையான இடவசதி இருக்காது என்பதோடு மட்டுமல்லாமல் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை வைப்பதற்கும், பராமரிப்பதற்கும் போதுமான இடமே இல்லை.

மேலும் செய்தி மற்றும் விளம்பரத்தின் நிர்வாக துறையானது தலைமை செயலகத்தில் செயல்பட வேண்டுமேயன்றி, இயக்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவது ஏற்புடையதல்ல. தலைமை செயலகத்தின் பிரதான தளத்தில், ஏறத்தாழ அனைத்து துறைகளிலும் பணியாளர்கள் சென்று வருவதற்கு கூட இடவசதி இல்லாத வகையில் நவீனமயமாக்கல் என்ற அடிப்படையில் பிரிவுகள் அமைக்கப்பட்டு, முற்றிலும் பணியாளர்களின் நலனுக்கு எதிராக உள்ளது.

தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டித்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டால், குறிப்பாக உள்துறையின் சில பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்கள் அந்த விபத்தில் இருந்து தங்கள தற்காத்துக் கொள்ள எந்தவித வாய்ப்பும் இல்லாத நிலையில் பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற தருணங்களில் தீயணைப்பு வாகனங்கள் பிரதான கட்டிடத்தின் உள்ளே வந்து தீயை அணைப்பதற்கு இயலுமா என்பது பெரும் கேள்விக்குறி.

முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுவதால், அதற்கான கூடுதல் இடம் தேவையின் அடிப்படையில் 9வது தளத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடத்தை எடுத்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இத்தளத்தில் உள்ள பணியாளர்களுக்கு எவ்வாறு இடஒதுக்கீடு செய்யப்படும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
இதுபோன்று இடம்மாற்றம் செய்யும்போது இதற்கெல்லாம் பொறுப்பேற்கும் பொதுத்துறையானது தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்று கிஞ்சித்தும் எண்ணியதில்லை.

பொதுத்துறையின் இந்த போக்கு வேதனைக்குரிய விஷயமாகும். ஆகஸ்டு 5ம் தேதி பட்ஜெட், தொடர்ந்து மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் 9வது, 10வது தளத்தில் உள்ள துறைகள் மாற்றம் செய்யப்படுவது பட்ஜெட் பணிகளை வெகுவாக பாதிக்கும். எனவே, அரசு பணிகள் தடையின்றி நடைபெற முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

 

Related Stories: