தகவல் ஆணையர் நியமனங்களை 6 வாரத்தில் முடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் காலி பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரி அஞ்சலி பரத்வாஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.மோகனா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ”தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர் உள்பட ஐந்து பணியிடங்கள் கடந்த ஜூன் முதல் காலியாக இருந்து வருகிறது. ஓய்வு காரணமாகவே காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக தேர்வு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதால், இதுசார்ந்த நியமனங்களை முடிக்க 3 மாதம் அவகாசம் வேண்டும் என்றார். இதை நிராகரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், தகவல் ஆணையங்கள் முடங்குவது பொதுமக்களின் உரிமையை பாதிக்கும். இந்த விவகாரத்தில் 3 மாதம் அவகாசம் என்பதை கண்டிப்பாக வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அடுத்த 6 வாரத்திற்குள் தமிழகத்தில் காலியாக இருக்கும் தகவல் ஆணையர்களின் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அதுகுறித்த சான்றிதழையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: