ஊட்டி அருகே காமராஜர் சாகர் அணை பகுதியில் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு

*உடனடியாக அகற்ற கோரிக்கை

ஊட்டி : ஊட்டி அருகே காமராஜர் சாகர் அணை பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மலைகளின் குறுகே அணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டு அதன் மூலம் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மூலம் சுமார் 800 மெகாவாட்க்கும் மேல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஊட்டி-கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது.

இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு மாயார், சிங்காராவில் உள்ள மின் நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர கோடை காலங்களில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள்ள வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும்.ஊட்டி-கூடலூர் சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் இந்த அணையை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ஊட்டி தவிர்த்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் அணை பகுதிகளில் அத்துமீறி நுழைகின்றனர். இதனிடையே காமராஜர் சாகர் அணையின் கரையோர பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் அணை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அணை நீரின் பாதுகாப்பு கருதி கரையோர பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: