×

4 பேரூராட்சிகளில் சிறப்பு முகாம்: மக்கள் தொகை சுய கணக்கெடுப்பில் பெரம்பலூர் 94.67 சதவீதம் நிறைவு

 

பெரம்பலூர்,ஜூலை 27: மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக நடத்தப் படும் சுய கணக்கெடுப்பில் எச்எல்ஓ செயலி வாயிலாக வீடுகள் பதிவினை இறுதி செய்ததில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டம் 94.67 சதவீதம்பெற்று முதலிடம் பெற்றுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. 15 ஆண்டுகள் கழித்து தற்போது 8ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வருகிற ஆகஸ்டு 1ஆம்தேதி முதல் 31 ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் முதற் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும், இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த காலங்களில் இல்லாததைப்போல தற்போது நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு எச்எல்ஓ என்ற செயலியின் வாயிலாக டிஜிட்டல் முறையில் நடத்தப் படவுள்ளது. பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது சுய விவரங்களை பதிவிடும் வகையில் சுய கணக்கெடுப்பு காலமாக கடந்த 17ஆம் தேதி முதல் வருகிற 31 வரை கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. அதன் பின்னர் ஆகஸ்ட் 01 முதல் 31 ஆம் தேதிவரை வீடுவீடாக நேரடியாக வந்து கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பின் போது வீடுகளின் கூரை அமைப்பு, வீடுகளில் உள்ள வசதிகள், வேலை, கால்நடைகள், வாகனங்கள் உள்ளிட்ட 33 கேள்விகளுடன் கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு வருகை புரிந்து HLO செயலியின் வாயிலாக விவரங்களை சேகரிப்பார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் இப்பணியினை மேற்கொள்வதற்காக 916 கணக்கெடுப்பாளர்கள், 150 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பணியினை ஒரு மாதத்தில் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பொது மக்கள் தங்களுக்கு எழும் அனைத்து சந்தேகங்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர்கள், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் மற்றும் லெப்பை குடிக்காடு, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர்கள் அலுவலகங்களை அணுகி நிவர்த்திசெய்து அங்கேயே பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்நிலையில் பொது மக்கள் தாங்களாகவே முன் வந்து தங்களது சுய விவரங்களை பதிவிடும் வகையில் சுய கணக்கெடுப்பு நடந்து வருவதில், விபரங்களைப் பதிவிடுவதில் இறுதி செய்த வகையில் 94.67 சதவீதம் முடித்து, தமிழகஅளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்படி நேற்று தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பதிவு இறுதிசெய்யப்பட்ட மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்த 16,433 விபரங்களில் 15,557ஐ இறுதி செய்த வகையில் பெரம்பலூர் மாவட்டம், தமிழகத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. 876 மட்டுமே இறுதி செய்யப் படாமல் இருந்தது. இறுதி செய்த பட்டியலில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அடுத்த படியாக திருப்பத்தூர் 93.16 சதவீதம், விழுப்புரம் 91.38 சதவீதம், கள்ளக்குறிச்சி 90.55 சதவீதம், திருவாரூர் 90.15 சதவீதம், ஈரோடு 90.02 சதவீதம் என பதிவாகியுள்ளது. மீதமுள்ள மாவட்டங்கள் அனைத்தும் 90சதவீதத்திற்கு கீழாகவே பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்கள் சுய கணக்கெடுப்பு பதிவுசெய்ய ஏதுவாக கடந்த 25,26 சனி, ஞாயிறு ஆகியஅரசு விடுமுறை நாட்களிலும் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திலும், பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய 4-தாலுகா அலுவலகங்களிலும், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம், லெப்பைக் குடிக்காடு, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய 4 பேரூராட்சி அலுவலகங்களிலும் காலை 10-மணிமுதல் மாலை 5-வரை சிறப்புமுகாம்கள் நடந்தது குறிப்பிடதக்கது.

Tags : Perambalur ,Tamil Nadu ,
× RELATED செட்டிகுளத்தில் மது விற்றவர் கைது