மாணவர் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு தர்மேந்திர பிரதான் ராஜினாமா; நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்

* கோரிக்கை நிறைவேறியதால் மாணவர்கள் கொண்டாட்டம்: போராட்டத்தை முடித்துக்கொண்டது கரப்பான் பூச்சி கட்சி

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதோடு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் மற்ற 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களின் போராட்டம் வாபஸ் பெறுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது.

தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனால் மன அழுத்தமடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஊடகம் மூலம் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த மாதம் 20ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கப்பட்டது.

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பாக வாங்சுக் நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்ட களத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் இளைஞர்கள் போராட்டம் பிசுபிசுத்து போகும் என ஒன்றிய அரசு எண்ணிய நிலையில், திட்டமிட்டபடி கடந்த 20ம் தேதி சிஜேபி கட்சியினரின் நாடாளுமன்றம் நோக்கிய பேரணி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டங்கள் வெடித்தன.

இதைத் தொடர்ந்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் மற்றும் மாணவர்களை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்களின் ஜந்தர் மந்தர் போராட்டம் தீவிரமடைந்தது.

அதே சமயம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பல்வேறு போராட்டங்கள், பேரணிகளை நடத்தினர். இதனால், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முதல் முறையாக மவுனம் கலைத்த பிரதமர் மோடி, சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதுதொடர்பாக நள்ளிரவில் அவர் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவுக்கு கடுமையான தண்டனைகளை உறுதி செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. அதே சமயம், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் எந்தவித சமரசமும் இல்லை என்றும், அதனை உடனடியாக ஏற்காவிட்டால் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்றும் சிஜேபி கட்சி பிரதிநிதிகள் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் நேற்று முன்தினம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இளைஞர்களின் போராட்டத்திற்கு பணிந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்ததாக அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். தங்களின் 36 நாள் போராட்டத்தின் முதல் வெற்றியாக கல்வி அமைச்சர் பிரதான் பதவி விலகியதை ஜந்தர்மந்தரில் சிஜேபி இளைஞர்கள், மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ‘‘நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்’’ என்று சிஜேபி கட்சியின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேசிய சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, ‘‘தர்மேந்திர பிரதான் பதவி விலகிவிட்டார். இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. பயப்படாமல் இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு இதுவே சான்று. ஜனநாயகத்தில் பேசுவதற்கு நீங்கள் பயப்படக்கூடாது. நீங்கள் குரல் எழுப்பினால்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் வரம்பை மீறாமல் நடந்து கொள்வார்கள்’’ என்றார்.

அதே சமயம், ஒன்றிய அரசு தங்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும் என அபிஜித் தீப்கே அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் 3ம் கட்ட பேச்சுவார்த்தையை நேற்று நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில் சிஜேபி கட்சியின் மற்ற கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இக்கூட்டத்தை தொடர்ந்து சிஜேபி பிரதிநிதிகள், ஒன்றிய அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தங்களின் 3 கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு நிறைவேற்றி விட்டதாக சிஜேபி செய்தித்தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

ஒன்றிய கல்வி அமைச்சர் பிரதான் பதவி விலகிய நிலையில், இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது மற்றும் எதிர்காலத்தில் இதுதொடர்பாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை அரசு உறுதி அளித்திருப்பதாகவும், தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க அரசு ஒப்புக் கொண்டதாகவும் சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தங்களின் போராட்டத்தை முடித்துக் கொள்ளவும் தயாராக இருப்பதாக அறிவித்தனர்.

ஒன்றிய அமைச்சர் நட்டா கூறுகையில், ‘‘டெல்லி மற்றும் பாஜ ஆளும் மாநிலங்களில் போராடிய இளைஞர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும். வழக்குகள் ரத்து செய்யப்படும் வரை மாணவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இளைஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி கல்வித் துறையில் வேண்டிய மறுசீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

இதன் மூலம் ஜந்தர்மந்தரில் சிஜேபி இளைஞர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இளைஞர்களின் எதிர்ப்பு காரணமாக ஒன்றிய அமைச்சர் பதவி விலகி, தவறுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்றிருப்பதை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் வரவேற்று பாராட்டி உள்ளனர். எந்த அரசியல் சார்புமின்றி இளைஞர்கள் தன்னெழுச்சி இயக்கமாக ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராடி வெற்றி இப்போராட்டம் இளைஞர்களின் சக்தியை பறைசாற்றுவதில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

* ராஜினாமா ஏன்? பிரதான் விளக்கம்
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முதல் நாளில் இருந்தே நான் அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டேன். கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததால் பிரதமர் மோடியிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன். இது எனது தனிப்பட்ட கவுரவம் சார்ந்த விஷயம் அல்ல.

ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதும் நிலவும் சூழலை தேச விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை தடுக்கவே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். நமது ஜனநாயகத்தின் வலிமையின் மீது எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். இளைஞர்களின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆழமாக மதிக்கிறேன். அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல. அவர்கள் புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவின் ஒளிவிளக்கை ஏந்துபவர்கள், படைப்பாளிகள் மற்றும் சிற்பிகள் ஆவர்’’ என்றார்.

* ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது
கரப்பான்பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் காரணமாக கடந்த மாதம் 20ம் தேதியிலிருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு நிலவியது. குறிப்பாக, கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் வன்முறை ஏற்பட்ட பிறகு அவ்வப்போது இரவு நேரங்களில் கல்வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தன. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியே பதற்ற பூமியாக மாறியது.

ஒருபுறம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிய, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இணைய சேவை துண்டிப்பு, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என அப்பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டன. இந்நிலையில், 36 நாட்களுக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வீடு திரும்பி ஜந்தர் மந்தர் மீண்டும் அமைதி அடைந்துள்ளது.

* புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி முர்மு அவரது ராஜினாமாவை முறைப்படி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் பிரகாலத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வி அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே கவனித்து வரும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகங்களுடன் இணைந்து கல்வி அமைச்சகத்தையும் கூடுதலாக கவனிப்பார்.

Related Stories: