நன்றி குங்குமம் டாக்டர்
உணவு என்பது பசியைத் தீர்ப்பதற்கான ஒரு வழி மட்டுமல்ல; அது மனிதனின் உடல்நலம், மனநலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாகும். சரியான திட்டமிடலுடன் பின்பற்றப்படும் சைவ உணவு, உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது என்கிறார் அகில இந்திய சைவ உணவு சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குநரான எஸ்.மகாவீர் சந்த் போத்ரா. சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து மேலும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
இந்தியாவில் சைவ உணவு முறையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு பரப்பும் நோக்கில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாக அகில இந்திய சைவ உணவு சங்கம் (Indian Vegetarian Council – IVC) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 1959-ஆம் ஆண்டு ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களால் தொடங்கப்பட்டது. இது அரசியல் சார்பற்ற, லாப நோக்கமற்ற தொண்டு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தேசியத் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.
அமைப்பின் முக்கிய நோக்கங்கள்
* இந்தியாவில் சைவ உணவு முறையின் நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல்.
* மனிதநேயம், அஹிம்சை மற்றும் உயிரின் நலன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
* ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவித்தல்.
* சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்க்கை முறைக்கு சைவ உணவு அளிக்கும் பங்களிப்பை எடுத்துரைத்தல்.
* இளைஞர்களிடையே சைவ உணவு குறித்த அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை வளர்த்தல் போன்றவை ஆகும்.
சைவ உணவின் முக்கியத்துவம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது – சைவ உணவுகளில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் விதைகள் ஆகியவை அடங்கும்; இவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றால் செழுமையானவை.நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது – சமச்சீரான சைவ உணவு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணவும், உடல் செயல்பாடுகள் சீராக இருக்கவும் உதவுகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது – விலங்கு சார்ந்த உணவுகளுடன் ஒப்பிடுகையில், தாவர அடிப்படையிலான உணவுகளை உற்பத்தி செய்வதற்குப் பொதுவாகக் குறைவான இயற்கை வளங்களே தேவைப்படுகின்றன;
சைவ உணவின் நன்மைகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவுகள் கொழுப்பைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும்
உதவும்.
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது: சைவ உணவுகளில் பெரும்பாலும் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகின்றன.
செரிமானத்திற்கு உதவுகிறது: நார்ச்சத்து மிக்க உணவுகள் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதோடு, மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: தாவர உணவுகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன.
ரத்த சர்க்கரையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது: முழுமையான தாவர உணவுகள் ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவும்.
நிலையான சூழலுக்கு உதவுகிறது: தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகம் உட்கொள்வது நீரைச் சேமிக்கவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் உதவும்.
முடிவுரை
இன்றைய இளம் தலைமுறையினரிடம் துரித உணவு பழக்கமும், பதப் படுத்திய உணவை அதிகம் உண்பதும் அதிகரித்து வருகிறது. இதனால், இளம் வயதிலேயே பலவித நோய்களும் அதிகரித்து வருகிறது. எனவே, அப்போதே சமைத்து உண்ணும் சைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வலியுறுத்துகிறோம். நாங்கள் சொல்வது என்னவென்றால் அசைவ உணவில் இருக்கும் அத்தனை சத்துக்களும் சைவ உணவிலும் இருக்கிறது. எனவே, சைவ உணவு முறையையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான்.
அதுபோன்று உணவகங்களிலும் சரி, விமான பயணங்களின் போதும் சரி சைவ உணவு பொட்டலங்களை வழங்கும்போது அதன் மீது சுத்த சைவ உணவை குறிக்கும் பச்சை வண்ண புள்ளி குறியீட்டை இட்டு வழங்கவும் வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். இதற்காக சைவ உணவு குறித்து விழிப்புணர்வு மாநாடு ஒன்றை அக்டோபர் 2ஆம் தேதி நடத்த உள்ளோம்.
தொகுப்பு:- ஸ்ரீ தேவி
