*தம்பதி மீது ஈரோடு எஸ்பி.யிடம் புகார்
ஈரோடு : ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தம்பதியினர் ரூ.42 லட்சம் மோசடி செய்து விட்டதாக அரசு ஊழியர்கள் உட்பட 3 பேர் ஈரோடு எஸ்பி.யிடம் புகார் மனு அளித்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஜிவிடிஎல் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (50). இவர், நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி கிரண் ஸ்ருதியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் வேளாண் துறையில் பணியாற்றி வருகிறேன். எனது நண்பர் சிவக்குமார் மூலமாக வெள்ளோடு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவி ரம்யா ஸ்ரீ அறிமுகமாகினர். இவர்கள், இருவரும் ஆன்லைனில் தொழில் செய்து வருவதாகவும், அதில் பணத்தை முதலீடு செய்தால் தினந்தோறும் 3 சதவீதம் லாபமும், 100 நாட்களில் முதலீடு செய்த பணத்தை இரு மடங்காக லாபத்தை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினர்.
இதை உண்மையென நம்பி கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி ரூ.11 லட்சத்தை இரு தவணையாக என்னிடம் இருந்து கோவிந்தசாமியும், அவரது மனைவியும் வாங்கி கொண்டனர். அடுத்த ஒரு வாரத்தில் நம்பும் வகையில் நான் செலுத்திய முதலீட்டிற்கு லாபமாக ரூ.1 லட்சத்தை மட்டும் கொடுத்தனர். அதன்பிறகு எந்தவொரு லாபத்தையும் கொடுக்கவில்லை.
பலமுறை அவர்களை தொடர்கொள்ள முயன்றும் முடியவில்லை. இதனால், அவர்கள் மீது சந்தேகம் எழுந்து வெள்ளோட்டில் விசாரித்தபோது, கோவிந்தசாமியும், அவரது மனைவி ரம்யா ஸ்ரீயும் இதுபோல பலரிடம் ஆன்லைன் தொழில் செய்வதாக பணத்தை பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.எனவே, என்னை ஏமாற்றி, பணத்தை பெற்று மோசடி செய்த கணவன்-மனைவி இருவர் மீது நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். இதேபோல், திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி பீர் குப்பம் பகுதியை பள்ளி ஆசிரியராக பணியாற்றும் குமார் (55) என்பவர் அளித்த மனுவில், கோவிந்தசாமியும், அவரது மனைவி ரம்யா ஸ்ரீயும் இணைந்து ஆன்லைன் டிரேடிங் செய்வதாக கூறி கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி ரூ.21 லட்சத்தை வங்கியின் மூலம் பெற்றுக்கொண்டனர்.
இந்த பணத்திற்கு ஒரு வார லாபம் என கூறி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் வழங்கினர். அதன்பின் எந்த ஒரு பணத்தையும் அவர்கள் கூறியதை போல வழங்காமல், என்னை மோசடி செய்துள்ளதாக ஈரோடு எஸ்பி.யிடம் புகார் மனு அளித்தார்.
மேலும், நம்பியூரை சேர்ந்த பால் பாண்டி (32) என்பவர் அளித்த மனுவில், ஆன்லைன் டிரேடிங் செய்வதாக கூறி கணவன்-மனைவி இருவரும் ரூ.9.80 லட்சத்தை பெற்று, மோசடி செய்து விட்டதாக ஈரோடு எஸ்பி.யிடம் தனியாக மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
