மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மாமல்லபுரம் டவுன், கிழக்கு கடற்கரை சாலை, தேவனேரி, பூஞ்சேரி, சாவடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கடைகள் இயங்கி வருகிறது. மேற்கண்ட இடங்களில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சிலர் கடைகளில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாமல்லபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மாரிச்செல்வி உத்தரவின் பேரில், மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அபர்ணா அறிவுறுத்தலின் பேரில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறதா என நகராட்சி தூய்மை ஆய்வாளர் குருசாமி தலைமையில், நகராட்சி பணியாளர்கள் மாமல்லபுரம் கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கடற்கரைக்கு செல்லும் சாலையில் உள்ள பல்வேறு கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனை ஊழியர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இதுபோன்று பிளாஸ்டிக் பைகள் விற்பது தெரிய வந்தால், கடைகளுக்கு சீல் வைத்து, கடைகளுக்கான உரிமம் ரத்து செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூய்மை ஆய்வாளர் குருசாமி கடுமையாக எச்சரித்தார்.
இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாமல்லபுரம் நகராட்சியில் அடிக்கடி சோதனையிட்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதிக்கிறோம். வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். விரைவில், பிளாஸ்டிக் இல்லா நகராட்சியாக மாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
