சென்னையில் இருந்து செல்லும் 20 வெளிநாட்டு விமானங்கள் 3 மணிநேரம் தாமதம்: பயணிகள் அவதி

சென்னை: மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து செல்லும் 20 வெளிநாட்டு விமானங்கள் 3 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன. தாமதம் மற்றும் ரத்து குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் பக்ரைன், குவைத் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது பாதுகாப்பு காரணமாக வான்வெளிகள் மூடப்படுவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அபுதாபி, துபாய், பக்ரைன், குவைத், சார்ஜா உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும், அந்த வான்வழிகளை கடந்து வரும் மற்ற வெளிநாட்டு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான சேவைகள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அபுதாபி, துபாய், சார்ஜா, பக்ரைன், மஸ்கட், லண்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் சுமார் 10 பயணிகள் விமானங்கள் தாமதமாக சென்னைக்கு வந்து சேர்ந்ததால் சென்னையில் இருந்து அந்த நாடுகளுக்கு புறப்படும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அபுதாபி, துபாய், சார்ஜா, மஸ்கட், சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட 10 நாடுகளுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று காலை வரையில் புறப்பட்டு செல்ல வேண்டிய 10 பயணிகள் விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 3 மணி நேரம் வரை தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.

அதேபோல், நேற்று மாலை 3 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் மாலை 4 மணியளவில் சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்டு செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், விமானங்கள் தாமதம் அல்லது ரத்து என்ற நிலை ஏற்பட்டால் அதுகுறித்து பயணிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு செய்யப்படுவதோடு டுவிட்டரில் அதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவிப்பார்கள்.

அதை பார்த்துவிட்டு பயணிகள் தங்கள் பயணம் செய்ய வேண்டிய விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்கள் பயணிக்கும் விமானங்கள் எப்போது சென்னைக்கு வரும், சென்னையில் இருந்து எப்போது புறப்பட்டு செல்லும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல், தங்கள் பயண திட்டத்தை வகுத்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து குறித்து எந்த தகவல்களும் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Related Stories: