சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முழக்கமிட்டப்படி தலைமை செயலகத்திற்குள் நுழைய முயன்ற ‘தெருக்குரல்’ அறிவு என்ற பாடகரை போலீசார் குண்டுக்கட்டாக இழுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தலைமை செயலகம் முன்பு நேற்று மதியம் ராப் பாடகரான, ‘தெருக்குரல்’ அறிவு தனது நண்பர்கள் 3 பேருடன் வந்தார்.
அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காதபடி தெருக்குரல் அறிவு தலைமை செயலகத்திற்குள் நுழைவாயில் முன்பு, ‘நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்… நீட் தேர்வு விஷயத்தில் தமிழக முதல்வர் விஜய் தலையிட வேண்டும்’ என்று கோஷம் எழுப்பியபடி உள்ளே நுழைய முயன்றார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ராப் பாடகரான அறிவை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி கோஷம் எழுப்பியபடி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் பாடகர் அறிவு போலீசாரின் சமாதான பேச்சை கேட்காமல் மீண்டும் உள்ளே நுழைய முயன்றார்.
இதையடுத்து வேறு வழியின்றி கோட்டை போலீசார் ‘தெருக்குரல்’ அறிவை குண்டுக்கட்டாக இழுத்து சென்று வேனில் ஏற்றினர். அப்போதும், அவர் நீட் தேர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி இருந்தார். பிறகு அவருடன் வந்த 3 நண்பர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தலைமை செயலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் தெருக்குரல் அறிவு முதல்வரை சந்திக்க அனுமதி அளித்தனர். தொடர்ந்து, அவர் முதல்வரை சந்தித்துவிட்டு திரும்பி சென்றார்.
