×

நெல்லை, தூத்துக்குடியில் காலநிலை மாற்றத்தால் வறண்ட குளங்கள்

*கருவேல மரங்களும் கருகிவரும் அவலம்

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தால் குளங்கள் வறண்டுள்ளதோடு கருவேல மரங்களும் கூட கருகி வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் 757 குளங்கள் தற்போது வறண்டு காணப்படும் நிலையில், அபிஷேகப்பட்டி அருகே வெள்ளாளன்குளம் வறட்சியில் தண்ணீரின்றி கருகி கந்தக பூமியாக காட்சியளிக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. அதை தொடர்ந்து ஜூன் மாதம் தொடங்கி பெய்ய வேண்டிய தென்கிழக்கு பருவமழையும் இன்று வரை போக்கு காட்டி வருகிறது. வானிலை ஆய்வாளர் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டதாகவே அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆனி, ஆடி மாதங்களில் வீச வேண்டிய அசுர காற்றையும் இவ்வாண்டு காணவில்லை. கோடை காலம் போல் வெயிலும், அதற்கு ஏற்றாற்போல் புழுக்கமும் பொதுமக்களை தொடர்ந்து வாட்டி எடுத்து வருகிறது. பகல் வேளைகளில் அடித்து நொறுக்கும் வெயில் காரணமாக வயல்வெளிகளில் விவசாயிகளால் வேலை செய்ய முடியவில்லை. இவ்வளவு காலமும் இல்லாத வகையில்நடப்பாண்டு ஆனி, ஆடி மாதங்களில் கூட நெல்லை, தூத்துக்குடியில் வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

இதன் விளைவாக பல இடங்களில் குளங்கள் தண்ணீரின்றி கந்தக பூமியாக காட்சியளிக்கின்றன. தண்ணீர் இல்லாத காலங்களில் பொதுமக்கள் குளங்களில் தங்கள் கால்நடைகளை மேய்க்க கொண்டு செல்வர். ஆனால் இப்போது அடிக்கிற வெயிலில் கால்நடைகளை குளங்களுக்கு கொண்டு செல்லவே வழியில்லை.

அங்கு பெயருக்கு கூட பசுமை இல்லாத நிலையில், மரங்களும் எலும்புக்கூடாகக் காட்சியளிக்கின்றன. எல்நினோ பாதிப்பின் காரணமாக கடும் கோடையை தென்மாவட்டங்கள் எதிர்கொண்டு வருவதாக வானிலை ஆய்வாளர்களும் பீதியை கிளப்பி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரையில் மொத்தமுள்ள 1098 குளங்களில், தற்போது 757 குளங்கள் வறண்டு விட்டதாக நீர்வளத்துறையின் புள்ளிவிவரத்தில் தெரியவருகிறது. இந்நிலையில் நெல்லை சுற்றுவட்டாரங்களில் வெள்ளாளன் குளம், வல்லவன் கோட்டை, அபிஷேகப்பட்டி குளப்பகுதிகளில் முன்பெல்லாம் பெயரளவுக்கு தண்ணீர் இருக்கும்.

இப்போது கடுமையான வறட்சியின் தாக்கத்தால் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. குளத்தின் நடுப்பகுதியிலும் கரையோரங்களிலும் வளர்ந்திருந்த கருவேல மரங்கள் போதிய நீரின்றி கிளைகள் காய்ந்து வாடிய நிலையில் காட்சியளிக்கின்றன.

ஒருகாலத்தில் பசுமையாக காட்சியளித்த பகுதி தற்போது வறண்ட நிலப்பரப்பாக மாறியுள்ளது. கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் குளத்திற்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது.

இதன் விளைவாக நிலத்தடி ஈரப்பதமும் குறைந்து, குளத்தைச் சுற்றியுள்ள மரங்கள் கருகிய நிலையில் காட்சியளிக்கின்றன. குறிப்பாக கருவேல மரங்கள் பெருமளவில் வறட்சியின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. இதில் வெள்ளாளன் குளம் சுற்றுவட்டாரத்தில் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு முக்கிய வாழ்விடமாக இருந்து வந்தது.

தற்போது நீர் இல்லாததால் பறவைகளின் வருகையும் குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கால்நடைகளுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிக்கே செல்வதில்லை. நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் மான்பூங்காவில் இருந்து வெளியேறும் மான்கள் முன்பெல்லாம் அபிஷேகப்பட்டி மற்றும் வெள்ளாளன்குளம் பகுதிக்கு வந்து குளங்களில் உள்ள தண்ணீரை பருகிவிட்டு அங்கு வாழ்வது வழக்கம்.

ஆனால் தற்போது தண்ணீர் இல்லாததால், மான்கள் வேறிடம் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மழை தாமதமானால் மேலும் பல மரங்கள் காய்ந்து அழியும் அபாயம் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, வடகிழக்கு பருவமழையை மட்டுமே எதிர்பார்க்காமல், நீர்நிலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, குளங்களை தூர்வாருதல் மற்றும் நீர்வள மேலாண்மை பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத 157 குளங்கள்

நெல்லை மாவட்ட நீர்வளத்துறை கணக்கின்படி 757 குளங்கள் வறண்டு காட்சியளிக்கும் நிலையில், அதில் 451 கால்வரத்து குளங்களும், 326 மானாவாரி குளங்களும் அடக்கம். இதில் 157 குளங்களில் இப்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை.

மேலும் நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1098 குளங்களில் 21 குளங்களில் மட்டுமே 3 மாதங்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளது. 31 குளங்களில் 2 மாதங்களுக்கு தேவையான நீர் இருப்பு உள்ளது. 289 குளங்களில் ஒரு மாதத்திற்கு தேவையான நீர் இருப்பு உள்ளது.

Tags : Nellai ,Thoothukudi ,Nellai district ,Vellalankulam ,Abhishekapatti ,
× RELATED குள்ளப்பகவுண்டன்பட்டி நீர்மின்...