×

மயிலாடுதுறை, விழுப்புரம் ரயில்களை நின்று செல்ல வலியுறுத்தி அய்யலூரில் ரயில் மறியலுக்கு முயற்சி

*போலீசார் குவிப்பால் பரபரப்பு

வேடசந்தூர் : அய்யலூரில் செங்கோட்டை- மயிலாடுதுறை, திண்டுக்கல்- விழுப்புரம் ரயில்களை மீண்டும் நின்று செல்ல வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியினர் ரயில் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வேடசந்தூர் அருகே அய்யலூர் மீட்டர் கேஜ் தடத்தில் காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் ரயில் போக்குவரத்து வசதி இருந்தது. 1998ல் அகல ரயில் பாதையாக மாறிய பின்னர் காலை, இரவு நேரங்களில் சென்ற திண்டுக்கல்- திருச்சி, மதுரை- விழுப்புரம் பயணிகள் ரயில்கள் மட்டும் நின்றன.

மதிய நேரத்தில் திருநெல்வேலி- மயிலாடுதுறை சென்ற பயணிகள் நீண்ட முயற்சிக்கு பின்னர் 19 ஆண்டுகள் கழித்து 2017 செப்டம்பர் முதல் ரயில் அய்யலூரில் நின்று சென்றது. 2020 கொரோனா பிரச்னைக்கு பின்னர் தற்போது அய்யலூரில் திண்டுக்கல்- திருச்சி பயணிகள் ரயில் மட்டும் நிற்கிறது.

மற்ற இரு ரயில்களும் எக்ஸ்பிரஸ் என மாறிய பின்னர் அய்யலூரில் நிற்பதில்லை. இந்த ரயில்களுக்கு மீண்டும் அய்யலூரில் நிறுத்தம் கோரி தமிழர் தேசம் கட்சியினர் ஜூலை 20ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

இதுதொடார்பாக வடமதுரையில் அக்கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கைக்காக 10 நாட்கள் அவகாசம் வழங்கி போராட்டத்தை ஒத்தி வைக்க வலியுறுத்தினர்.

ஆனால் இதை அக்கட்சியினர் ஏற்காததால் சமரசம் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார், மாநில அமைப்பு செயலாளர் மகுடேஸ்வரன் தலைமையிலான அக்கட்சியினர் 170 பேர் ரயில் மறியல் செய்ய வந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஏடிஸ்பி தெய்வம், வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா, வடமதுரை இன்ஸ்பெக்டர் நிதி குமார் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ரயில்வே டிஎஸ்பி சிவராஜ், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் மதுரை ரயில்வே கோட்ட உதவி இயக்க மேலாளர் விஜயகுமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு உரிய ஆய்வு செய்து சாத்தியக்கூறுகள் இருந்தால் ரயில் நின்று போக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பின்பே அனைவரும் ரயில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Ayyalur ,Mayiladuthurai ,Villupuram ,Vedasanthur ,Tamil Desam Party ,Sengottai ,Dindigul ,
× RELATED வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது – கனிமொழி எம்.பி