திருப்பூர், ஜூலை 21: திருப்பூர் வடக்கு போலீசார் கொடிக்கம்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், திருப்பூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (47), சாமுண்டிபுரத்தை சேர்ந்த நாகராஜ் (26) என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், அவினாசி போலீசார் பெருமாநல்லூர் சாலை, வேலூர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும், சற்று தொலைவில் காரை நிறுத்தினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று காரை சோதனை செய்தனர்.
அப்போது காரில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக திருப்பூர் குமாரானந்தபுரம், காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த உதயகுமார் (35), அங்கேரிபாளையம், மகாவிஷ்ணு நகரை சேர்ந்த மாரீஸ்வரன் (29) மற்றும் சிவகாசி, வெள்ளையபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (29) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 55 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
