கோவை, ஜூலை 21: கோவை டவுன்ஹாலில் பன்முக கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிகிச்சைக்காகவும், தடுப்பூசி போடவும் கொண்டு வருவார்கள். தினமும் காலை முதல் மதியம் வரை சுமார் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பன்முக கால்நடை மருத்துவமனையின் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்து இருந்தது. தவிர, கால்நடைகளுடன் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அங்கு அமர இருக்கை வசதியும் இல்லை. கழிவறையும் இல்லை.
இது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ நிதியின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய காம்பவுண்ட் சுவர் கட்டவும், பொதுமக்கள் அமரும் வகையில் ஷெட் அமைத்து இருக்கை வசதியும், கழிவறை வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, பழுதடைந்த காம்பவுண்ட் சுவர் முழுவதுமாக நேற்று இடிக்கப்பட்டது. இந்த பணிகள் முழுவதும் மூன்று மாதத்திற்குள் முடிக்கப்படும் என கால்நடை பாராமரிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
