முசிறியில் தூர்ந்துபோன பாசன வாய்க்கால்கள்: கழிவுநீரின் புகழிடமாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனை

 

முசிறி, ஜூலை 19: முசிறி நகரின் வழியாகச் செல்லும் காவிரி பாசன வாய்க்கால்கள் தூர்ந்துபோய், புதர்கள் மண்டி, பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுநீரின் புகலிடமாக மாறியுள்ளதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். காவிரி ஆற்றின் மூலம் பாசனம் பெறும் மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், வடகரை வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் ஒரு காலத்தில் விவசாய நிலங்களுக்கு உயிர்நாடியாக இருந்தன.பாசன வாய்க்கால்களில் தண்ணீர் ஓடும்போது பசுமையான வயல்வெளிகளும், வாழைத்தோட்டங்களும் காட்சிக்கு ரம்யமாக இருக்கும். ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணையில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததாலும், போதிய மழையில்லாததாலும் விவசாய நிலங்கள் வறண்டு கிடக்கின்றன.

சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், தற்போது பாசன வாய்க்கால்களின் நிலை மேலும் பரிதாபமாகியுள்ளது. வாய்க்கால் முழுவதும் புதர்கள் மண்டி, பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் நிரம்பிக் கிடக்கின்றன. குறிப்பாக, மேட்டு வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி, ஆகாயத் தாமரைகள் வளர்ந்து, கொசுக்களின் உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து முசிறியைச் சேர்ந்த விவசாயி கார்த்திக் கூறுகையில், ”விவசாயம் செய்ய முடியாததால் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளோம். காவிரியில் தண்ணீர் இல்லாததாலும், குடிநீருக்காகத் திறக்கப்படும் தண்ணீர் கரையைத் தொடாததாலும், வாய்க்கால்கள் குப்பை மேடாக மாறிவிட்டன.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருந்தால், இந்த வாய்க்கால்கள் பராமரிக்கப்பட்டிருக்கும். தண்ணீர் வரவில்லை என்றாலும், வாய்க்கால்களைத் தூர்வாரி கரைகளை உயர்த்தி, குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார். பாசன வாய்க்கால்களின் தற்போதைய அவலநிலை, நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து, உடனடியாகத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: