திருவனந்தபுரம்: ரூ. 3 ஆயிரம் பணம் வாங்கி 9 வருடங்கள் ஆன பிறகும் பெண் பார்த்துக் கொடுக்காததால் வாலிபருக்கு ரூ. 8 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க கண்ணூரைச் சேர்ந்த திருமண தகவல் மையத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் முகுந்தன். இவரது மகன் கிரீஷ் (50). தன்னுடைய 40 வயது வரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தான் இவர் நினைத்திருந்தார். இந்நிலையில் முகுந்தனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. தான் இறப்பதற்கு முன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இவர் விரும்பினார். அதற்கு கிரீஷும் சம்மதித்தார். இதன்படி கடந்த 2016ம் ஆண்டு கிரீஷ், கண்ணூர் டவுனில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தை அணுகினார்.
ரூ. 3 ஆயிரம் கட்டணம் செலுத்தினால் உடனடியாக அழகான பெண்ணை பார்த்து தருவதாக திருமண தகவல் மையத்தினர் கூறினர். அதை கிரீஷும் நம்பி பணத்தை கட்டினார். ஆனால் வருடங்கள் போனதே தவிர கிரீஷுக்கு பெண் கிடைக்கவில்லை. இறப்பதற்கு முன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்க்கலாம் என்று கருதிய முகுந்தன் கடந்த வருடம் மரணமடைந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிரீஷ், திருமண தகவல் மையத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனக்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ. 3 ஆயிரம் பணம் வாங்கி 9 வருடங்கள் ஏமாற்றி மன உளைச்சலை ஏற்படுத்திய திருமண தகவல் மையம் தனக்கு ரூ. 15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடவேண்டும் என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், கிரீஷுக்கு திருமண தகவல் மையம் ரூ. 8 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. வரும் 30ம் தேதிக்குள் கிரீஷுக்கு பணத்தை வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.
