×

இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

 

சென்னை: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக கருதப்படுகிறது. சூரியன் வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம், தட்சிணாயன காலமாகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன காலமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் வழிபாடு மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர்.

ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப் பவுர்ணமி, ஆடி தபசு என பல்வேறு விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனை வழிபட உகந்ததாக கருதப்படுகிறது. இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சென்னை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அதிகாலை கோபூஜையுடன் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வாரம் ஆரம்பிக்கும் திருவிழா புரட்டாசி மாதம் வரை 12 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும்.

இதில், ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மஞ்சள், சந்தனம், வெள்ளி, தங்கக்காப்பு அலங்காரம் செய்யப்படும். 108 சிறப்பு சங்காபிஷேகம் என ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனைத்தொடர்ந்து மாலையில் 108 பெண் பக்தர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதைத்தொடர்ந்து 5 வாரம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் இன்று காலை ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனர். அதேபோல பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா இன்று தொடங்கியது. இந்த விழா 10 வாரங்கள் நடைபெறும். விழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து, அம்மனை வழிபடுவார்கள்.

இந்நிலையில் இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையில் கோயில் மூலவர் சுயம்புவான பவானி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மூலவருக்கு வெள்ளி கவசம் அணிவித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

முன்னதாக, அதிகாலையில் பந்தகால் நடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், பெரும்பாலான பெண் பக்தர்கள், சிறுவர்கள் ஆகியோர் மஞ்சள் ஆடை அணிந்து பாத யாத்திரையாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

 

 

Tags : Chennai ,Aadi ,Dakshinayana ,Margazhi ,
× RELATED சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு