சென்னை: கோபி சட்டமன்ற தொகுதி தேர்தலில் செங்கோட்டையன் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு தாக்கல் செய்த மனுவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திமுக வேட்பாளர் நல்லசிவத்தை விட 16,620 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், செங்கோட்டையனின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் வி.பி.பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த கட்டத்தில் தள்ளுபடி செய்ய முடியாது. வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதை முடிவுசெய்த பிறகே தீர்மானிக்க முடியும் என்று உத்தரவிட்டார். இந்த தேர்தல் வழக்கு குறித்து அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் ஆணையம் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
