நெல்லை: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி; தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களை யாருக்கும் தாரை வார்த்து கொடுக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. இதற்கு முன்னுதாரணமாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன. கோயிலில் பூஜை செய்பவர்களுக்கு மட்டுமே கோயில் நிலங்களை வழங்க வேண்டும். அதுவும் பயிர் செய்ய மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிலை உள்ளது. கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களிடம் வாடகை வசூலிக்கலாம்.
ஆனால் தற்போது கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுக்கு தெரிந்தே கோயில் நிலங்கள் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும். பழனி கோயில் அடிவாரத்தில் பல கோடி மதிப்புடைய ஒரு ஏக்கர் 40 சென்ட் கோயில் நிலம் (ரூ.100 கோடி) அவசர கதியில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இந்த பத்திர பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்தேகம் உள்ளது. இதுகுறித்து அரசும், முதல்வரும் விளக்கம் அளிக்க வேண்டும்.
மின்வாரியத்தில் 65 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் சேவைகுறைபாடு ஏற்படுகிறது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செயல்பாடு இல்லாமல் உள்ளார். தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லை என்று முதல்வர் விஜய் மேடையில் மட்டுமே சினிமா வசனம் போல் பேசுகிறார். ஆனால் அனைத்து இடங்களிலும் லஞ்சம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. மாமா, அண்ணன் என்றெல்லாம் முதல்வர் விஜய் பேசி வருகிறார்.
ஆனால் அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய 50க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை விஜய் அண்ணனோ, விஜய் மாமாவோ ஏனென்று கேட்கவில்லை. அவர் சினிமா பாணியில் மேடைகளில் மட்டுமே வீரவசனம் பேசி வருகிறார்.
அமைச்சர் ஆனந்த் குதிரை பேரத்தில் மட்டும் பிசியாக இருக்கிறார். குதிரை பேரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பதவிகளை தனது நண்பர்களுக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்து வருகிறார். இது மக்கள் அவருக்கு அளித்த வாக்குகளை மதிக்காமல் செயல்படுவதை காட்டுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களை பெயர்மாற்றி புதிய திட்டங்களாக அறிவிப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* மேகதாது பிரச்னை காங்கிரசால் தீர்க்க முடியாதது ஏன்?
‘‘மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் அழுத்தம் கொடுக்காமல் எழுதி கொடுப்பதை மேடைகளில் பேசிவருகிறார். வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்க வேண்டும். தற்போது ஒரு மாதத்தை கடந்தும் அணை திறக்கப்படவில்லை.
பாஜக கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருந்த போது காவிரி நீர் பிரச்சனை இல்லாமல் தமிழக மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. கர்நாடக முதலமைச்சரும், தமிழக காங்கிரஸ் தலைவரும் நெருங்கிய நண்பர்கள்தான். இவர்கள் 2 பேருமே ராகுல் காந்திக்கு நெருங்கிய நண்பர்கள் தான். போனில் பேசினாலே வேலை முடிந்து விடும்’’ என்று நயினார் தெரிவித்தார்.
