நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 5 நாட்களாக தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருகிறது. என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் நேற்று முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை ரூ.6.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் முட்டை தேவை அதிகரிப்பு, கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது: வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மீன்வரத்து அங்கு குறைந்துள்ளது. இதனால் முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது. கேரளாவிலும் இதேநிலை தான் உள்ளது. கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரும் நாட்களிலும் முட்டை விலை தொடர்ந்து உயரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
