சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக தொழில் செய்து வருபவர் ஜான் சத்தியன். குற்றவியல் வழக்குகளில் மிகுந்த நிபுணத்துவம் பெற்ற இவர் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜரானவர். தவெக அரசு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் இவர் குற்றவியல் வழக்கறிஞராக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமை செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையில் ஜான் சத்தியன் தமிழ்நாடு அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம் என்பது உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளில் பெரும்பான்மையான நீதிபதிகளின் ஒப்புதலின் அடிப்படையில் நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
