தஞ்சாவூர், ஜூலை 14: தஞ்சை பெரியகோவில் பகுதியில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வழக்கம்போல் பெரிய கோயில் பகுதியில் இருவழி பாதையாக மாற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் பொதுமக்களின் வசதிக்காகவும், வெளியூரிலிருந்து அதிக அளவு வாகனங்கள் பெரிய கோவிலுக்கு வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக தஞ்சாவூர் பெரிய கோவில் ரோடு ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மெடிக்கல் காலேஜ் ரோடு வழியாக வரும் வாகனங்களும், ராமநாதன் ரவுண்டானா வழியாக வரும் வாகனங்களும் மேம்பாலம் வழியாக வந்து இடது புறம் திரும்பி பெரிய கோவில் வழியாக சென்று சோழன் சிலையில் வலது புறம் திரும்பி அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை ரோடு பழைய பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.
கரந்தை வழியாக பெரியகோவிலுக்கு வரும் வாகனங்கள் அண்ணாசிலை, ஆத்துபாலம், பழைய கோர்ட் ரோடு, ஆயுதப்படை மைதானம் வழியாக டிஐஜி அலுவலகம் வந்து வலதுபக்கம் திரும்பி பெரிய கோயில் வர வேண்டும். மெடிக்கல் காலேஜ் ரோடு மற்றும் ராமநாதன் ரவுண்டானா செல்ல வேண்டிய வாகனங்கள் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை ரவுண்டானா, ஆத்துபாலம், பழைய கோர்ட் ரோடு, ஆயுதப்படை மைதானம் வழியாக டிஐஜி அலுவலகம் வந்து இடது பக்கம் திரும்பி மேம்பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.
அதே போல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை பூங்கா மற்றும் மேற்கு பக்கம் செல்லக் கூடிய வாகனங்கள் அண்ணாசிலையில் திரும்பி, அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை ரோடு, ராஜராஜன் சோழன் சிலையில் வலது புறம் திரும்பி செல்லவேண்டும். இந்த நிலையில் அவ்வாறு செல்லும் வாகனங்கள் அனைத்தும் அண்ணா சாலை வழியாக செல்வதால் அந்த பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் அந்தப் பகுதியில் வாகனங்களை வருபவர்கள் காத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து மாற்றத்தை அகற்றிவிட்டு எப்போதும் போல் வாகனங்களை பெரிய கோவில் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
