×

ரூ.41 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் உத்திரமேரூர் பைபாஸ் பணி மீண்டும் முடங்கிய அவலம்

உத்திரமேரூர், ஜூலை 13: ரூ.41 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் உத்திரமேரூர் பைபாஸ் பணியில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அலட்சியமாக உள்ள ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றானது உத்திரமேரூர். குடவோலை முறை கல்வெட்டுக்கு பெயர் போன உத்திரமேரூரை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நாளுக்குநாள் வளர்ச்சிக்கு ஏற்ப பொதுமக்கள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதன் காரணமாக நகரில் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தினசரி காலை, மாலை வேளைகளில் நகரைச் சுற்றியுள்ள கல்லூரிகள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சென்று வருகின்றனர். மேலும் கம்பெனிகளுக்கு லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், பஸ்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால் உத்திரமேரூர் பஜார் வீதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் பெரிய நிறுவனங்களுக்குச் செல்லும் கன்டெய்னர் லாரிகள் அவ்வப்போது சாலையை கடக்க முற்படும் போதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் கியூ கட்டி நின்று போக்குவத்து பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாலையை கடப்பது என்பதே மிக சிரமமான காரியமாக உள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

மேலும் பஜார் வீதியில் அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளதால் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் கர்பிணிப் பெண்களும் மருத்துவமனைக்கு செல்வதென்பது மிகவும் அறிதாகி வருகிறது. 108 ஆம்புலன்ஸ் கூட போக்குவரத்து நேரங்களில் சிக்கி தவிக்கிறது. உத்திமேரூரில் நகரின் வளர்ச்சிக்கேற்றார் போல் சாலைகள் ஏதும் அமைக்கப்படவில்லை. மேலும் தற்போது உள்ளது பஜார் வீதி சாலை மட்டும் தான், அதுவும் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டும், வாகனங்களாலும் பஜார் வீதி சாலை குறுகியே காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரிய தலைவலியாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டி பல ஆண்டுகளாக உத்திரமேரூர் பகுதி மக்கள் பைபாஸ் சாலை அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த 2013ம் ஆண்டு உத்திரமேரூரில் 4.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்படும் என்ற அறிவிப்பாணையை அரசு வெளியிட்டிருந்தது.

இந்த பைபாஸ் ரோடு உத்திரமேரூர்-செங்கல்பட்டு சாலையில் உள்ள அ.பி.சத்திரம் சாலைக்கு இடையே தொடங்கி, வேடபாளையம் வழியாக வந்தவாசி ரோட்டில் இணையும் வகையில் சர்வே செய்யப்பட்டு அமைக்க திட்டமிடப்பட்டது. எனினும் பணியானது அப்போதே கிடப்பில் போடப்பட்டது. பைபாஸ் சாலை வரும் என நிம்மதியடைந்த பொதுமக்கள், பணிகள் கிடப்பில் போடப்பட்டதும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அடுத்து கடந்த 24.06.2024 அன்று சுமார் ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பைபாஸ் பணிகள் மீண்டும் தொடங்கியது. பல ஆண்டுகள் கழித்து பைபாஸ் பணிகள் மீண்டும் தொடங்கி வேக வேகமாக நடந்து வந்தன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பைபாஸ் சாலை பணி மீண்டும் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். உத்திரமேரூரில் பொதுமக்கள் தொடர்ந்து கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பொது மக்களின் கோரிக்கை விரைந்து முடிக்கப்படும் என கூறும் த.வெ.க அரசு இந்த பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்குமா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சாலை பணிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கப்படும் என கூறி டெண்டர் எடுத்துவிட்டு பணிகளை முடிக்காமல் காலதாமதம் ஏற்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மீதும், இதனை கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயுமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே பைபாஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்பாக உள்ளது.

Tags : Uttaramerur ,Kanchipuram ,
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில்...