×

அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்; குண்டுவீச்சில் வணிக கப்பல் தீப்பிடித்தது; 10 இந்தியர்கள் மீட்பு, ஒரு ஊழியர் மாயம்: பதில் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் பதற்றம்

துபாய்: ஹார்முஸ் ஜலசந்தியில் அங்கீகரிக்கப்படாத பகுதியில் சென்ற வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் தீப்பிடித்த கப்பலில் இருந்து 10 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரு ஊழியர் மாயமாகி உள்ளார். இதற்கு பதிலடியாக ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், பக்ரைன், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை வீசியதால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.

அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த வாரம் 3 வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, ஈரானின் பல பகுதிகளை தாக்கியதால் போர் நிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குறியாகி உள்ளது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளை குறிவைத்து ஏவுகணை, டிரோன்களை ஏவியது.

ஹார்முஸ் ஜலசந்தியை சுதந்திரமான சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடமாக திறந்திருப்பதை உறுதி செய்ய அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே ஈரான் விரும்புகிறது. இந்நிலையில், ஈரான் கடல் எல்லை பகுதிகளை தவிர்த்து, அங்கீகரிக்கப்படாத வழியாக ஓமன் நோக்கி சைப்ரஸ் நாட்டு கொடியுடன் கூடிய வணிக கப்பல் நேற்று சென்று கொண்டிருந்தது.

பலமுறை எச்சரித்தும் இந்த கப்பல் தொடர்ந்து முன்னேறியதால், ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர காவல் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் கப்பலின் இன்ஜின் பகுதி தீப்பிடித்ததில் கப்பலில் இருந்த 10 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒரு இந்திய ஊழியர் மட்டும் மாயமாகி உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரானின் பல இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது.

அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை மையம் வெளியிட்ட அறிக்கையில், ஏவுகணை, டிரோன் ஏவுதளங்கள், வெடிமருந்து கிடங்குகள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட 140 இலக்குகள் தாக்கப்பட்டதாகவும், இத்தாக்குதல் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் விடக்கூடிய ஈரானின் திறனை குறைக்கும் என்றும் கூறியது. கடந்த வாரம் நடந்த 2 கட்ட தாக்குதலை விட இம்முறை அதிகமான இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானிலிருந்து வந்த தாக்குதல் முயற்சிகளை தடுத்து அழித்ததாக கத்தார் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைகளை தடுத்தபோது சிதறிய பாகங்கள் விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாக கத்தார் உள்துறை அமைச்சகம் கூறியது. அமெரிக்க கடற்படையின் 5வது படைப்பிரிவு நிலைநிறுத்தப்பட்டுள்ள பக்ரைனிலும் ஏவுகணை எச்சரிக்கைகள் ஒலித்தன.

குவைத் ராணுவமும் தங்களை நோக்கி வந்த தாக்குதல்களைத் தடுத்து வருவதாகத் தெரிவித்தது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள வடகிழக்கு ஓமனின் சில பகுதிகளில் டிரோன்கள் தாக்குதல் நடந்ததாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஐக்கிய அரபு அமீரகத்திலும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. ஆனால் ஏவுகணைகள் எதுவும் அமீரக எல்லைக்குள் நுழையவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதன் மூலம் போர் நிறுத்தம் முற்றிலும் முறிந்திருப்பது உறுதியாகி உள்ளது.

மேலும், வளைகுடா நாடுகளை ஈரான் மீண்டும் குறிவைத்திருப்பது மேற்கு ஆசியாவில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, ஹார்முஸ் ஜலசந்தியை மறுஅறிவிப்பு வரும் வரை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் வளைகுடா நாடுகள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என மிரட்டி உள்ளது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில், மீண்டும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் நிலை உருவாகி உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்படும் பட்சத்தில் இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் கூடும். இந்தியாவின் பெரும்பாலான எரிவாயு தேவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடப்பதால், எரிவாயு விநியோகம் தடைப்பட்டு வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இது இந்தியாவுக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவும் ஈரானும் மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென பாகிஸ்தான் துணை பிரதமர் ஐசக் தர் வலியுறுத்தி உள்ளார்.

* இந்தியா கடும் கண்டனம்
இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஓமன் கடற்கரை பகுதியில் ஜிஎப்எஸ் கேலக்சி என்ற வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் மாயமாகி உள்ளார். ஓமனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் கடும் கவலையளிப்பதாக உள்ளது. பதற்றத்தை தணிக்கவும், அமைதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Iran ,Strait of Hormuz ,US ,Indians ,Gulf ,Dubai ,
× RELATED நைஜீரியாவில் பயங்கரவாதிகளால்...