ஹனோய்: வியட்நாமில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் பலியாகினர். 21 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். செல்போன் நிறுவனம் அழைத்துச் சென்ற சுற்றுலாவின் போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. வியட்நாமின் மிகப்பெரிய தீவான ஃபூ குவோக் பிரபலமான சுற்றுலா தலமாகும். வெள்ளை மணல் கடற்கரை மற்றும் தெளிவான நீல கடல் நீரால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு ஸ்கூபா டைவிங், படகு சவாரி செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று பகல் 1 மணி அளவில் அதிவேக சுற்றுலா படகு ஒன்று 32 இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் கடலுக்குள் புறப்பட்டது. ஓஷன் பியர் ஐலேண்ட் நிறுவனம் இயக்கிய அந்த படகு ஹான் மே ரட் பகுதியிலிருந்து ஆன் தோய் துறைமுகத்தை நோக்கி சென்றது. படகில் இருந்த இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். பிரபல செல்போன் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை வியட்நாமுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தது.
அந்த சுற்றுலாவில் வந்தவர்கள் படகில் பயணித்து வியட்நாம் கடல் அழகை காண புறப்பட்டனர். ஹான் மே ரட்டிலிருந்து படகு புறப்பட்டு சுமார் 400 மீட்டர் தொலைவில் சென்ற நிலையில், திடீரென பெரும் அலை வீசியது. அந்த அலை படகு மீது மோதியதும், பயணிகள் அனைவரும் ஒருபக்கமாக தள்ளப்பட்டனர். இதனால், ஒரே பக்கம் பாரம் அதிகரித்ததால் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த சமயத்தில் சுதாரித்துக் கொண்ட சிலர் படகின் ஜன்னல், கதவு வழியாக தப்பி படகின் மீது ஏறினர்.
உதவிக்காக அவர்கள் கையை அசைத்ததை பார்த்த கரையில் இருந்த மற்ற படகு உரிமையாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து நடந்து 5 நிமிடத்திற்குள் அவர்கள் விரைந்து வந்த நிலையில், கவிழ்ந்த படகிலிருந்து தப்பியவர்களை மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர். அதே சமயம், பலரும் படகில் இருந்து வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்பது சிக்கலானது. உடனடியாக கடற்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட மீட்பு படையினரும் விரைந்து வந்து படகின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர்.
அதில் பலரும் மயக்க நிலையிலேயே மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பெண்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். 2 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தகவல் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக, ஹோ சி மின் மற்றும் ஹனோய் நகரில் இந்திய தூதரகம் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உதவி தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹா லாங் பே தீவில் 20 குழந்தைகள் உட்பட 48 பேருடன் சென்ற சுற்றுலா படகு திடீர் சூறைக்காற்றால் கடலில் கவிழ்ந்து 35 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து தற்போதும் கோரமான படகு விபத்து நடந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம், வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அவசரக்காலத் தயார்நிலை குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
* செல்போன் நிறுவனம் இரங்கல்
வியட்நாம் படகு விபத்தில் பலியானவர்களை சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்த பிரபல செல்போன் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதன் இரங்கல் செய்தியில், ‘‘வியட்நாமில் நடந்த துயரமான படகு விபத்து குறித்து அறிந்து நாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம். இந்த விபத்தில் எங்களின் சில ஊழியர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இருந்தனர்.
அவர்களின் பாதுகாப்பு குறித்து அறிய வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதே எங்களின் முன்னுரிமை’’ என கூறி உள்ளது.
* பலியானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்
செந்தில் குமார்
முருக பிரபு
ஸ்ரீதர்
ஷேக் அப்துல்லா
பாலாஜி
வினய் குமார்
ரவிசங்கர்
சந்தோஷ் குமார்
பாபு குப்புசாமி
அழகுராஜன்
* ஆந்திராவை சேர்ந்தவர்கள்
நல்லபேட்டா ஆதிஷேசய்யா
ஸ்ரீதர் முடியம்
ஜெய லட்சுமி
* கேரளாவை சேர்ந்தவர்கள்
அவிகாட் செரியன்
லவ்லி
* விற்பனை இலக்கை எட்டியவர்களுக்கான இன்ப சுற்றுலா
பிரபல செல்போன் நிறுவனம், தென்னிந்தியாவில் விற்பனை இலக்கை எட்டிய விநியோகஸ்தர்களை இன்பச் சுற்றுலாவாக வியட்நாமுக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதன்படி மொத்தம் 105 விநியோகஸ்தர்கள் வியட்நாமுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளனர். வியட்நாமில் உள்ள த்ரீலேண்ட் டிராவல் நிறுவனம் உள்ளூர் ஒருங்கிணைப்பு நிறுவனமான சாய் வியட்நாம் மூலம் இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஒரு குழுவினர் சென்ற படகு கவிழ்ந்து 15 பேர் பலியானதால் இன்ப சுற்றுலா சோகத்தில் முடிந்தது.
* விபத்துக்கான காரணம்?
வியட்நாமில் அழகான தீவுகள் இருந்தாலும் கடல் பகுதிகள் ஆபத்தும் நிறைந்தவை. திடீர் சூறாவளி, திடீர் பேரலைகள் அடிக்கடி நடக்கக் கூடியவை. விபத்து நடந்த நேற்றைய தினத்திலும் மழை உள்ளிட்ட எந்த மோசமான வானிலையும் கிடையாது. விபத்துக்குள்ளான படகு தவிர மற்ற பல சுற்றுலா படகுகளும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் திடீரென ஏற்பட்ட பேரலை படகை கவிழ்த்ததே விபத்துக்கு காரணம். இப்படிப்பட்ட சூழல் இருக்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் யாருக்கும் லைப் ஜாக்கெட் தராமல் படகில் அழைத்துச் சென்றதும் பலி அதிகமாக காரணமாகி உள்ளது. படகிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் யாரும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை.
* பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
வியட்நாம் படகு விபத்து குறித்து பிரதமர் மோடி விடுத்த இரங்கல் செய்தியில், ‘‘வியட்நாமின் ஃபூ குவோக் அருகே இந்தியர்கள் பலியான படகு விபத்து குறித்த துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இந்தியத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஆகியவை சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. எங்கள் அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்’’ என கூறி உள்ளார். இதே போல, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
