திருவள்ளூர்: அரசு மருத்துவமனைகளில் ஓபி சீட்டு பெற ஆதார் எண் மற்றும் ஓடிபி எண் அவசியம் என்பதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் வரிசையில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் திருவள்ளுர் மாவட்டம், பெரியகுப்பம் கிராமத்தில் 8.48 ஏக்கர் பரப்பளவில் 6 அடுக்கு கொண்ட மருத்துவமனை கட்டிடம் கடந்த 2022ம் ஆண்டு சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தற்போது 1000 படுக்கை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதில், பொது மருத்துவ பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மயக்கவியல் துறை, பல் நலவியல் துறை, எலும்பியல் மற்றும் முடநீக்கியல் துறை, கண் மருத்துவத் துறை, காது-மூக்கு-தொண்டை மருத்துவத்துறை, தோல் மருத்துவத்துறை, நெஞ்சக மற்றும் காச நோய் மருத்துவத்துறை, ரத்த வங்கி, தீக் காயங்கள் சிகிச்சை அளிக்கும் பிரிவு, மனநல மருத்துவத்துறை, மேம்படுத்தப்பட்ட மத்திய ஆய்வகம், கதிரியக்கவியல் துறை, இயன்முறை சிகிச்சை பிரிவு, திரவ நச்சு நீக்கியல் பிரிவு மற்றும் 10 அறுவை சிகிச்சை அரங்கமும், 98 படுக்கை வசதியுடன், 6 திவிர, அதிதீவிர, உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவும் உள்ளது.
இதில், அனைத்து விதமான உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் இயந்திரங்கள் உள்ளன. மகப்பேறு மற்றும் தாய்சேய் நல சிகிச்சை பிரிவுக்கென 200 படுக்கை வசதிகள் கொண்ட எம்சிஎச் வார்டு தற்பொழுது செயல்பட்டு வருகிறது. இந்த, மருத்துவமனை செயல்பட தொடங்கியது முதல் நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அங்கு தீர்க்கப்படாத நோய்களுக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதைகளுக்கு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்வதுண்டு. அவ்வாறு வரும் புற நோயாளிகளுக்கு துண்டு சீட்டு ஒன்று எழுதி கொடுத்து, அதை பதிவேற்றம் செய்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால், கடந்த திமுக ஆட்சியின்போது வெளி நோயாளிகள் ஒருமுறை வந்தவர்கள் அடுத்த முறை வரும்போது மீண்டும் வரிசையில் நின்று வாங்காமல் நேரடியாக நோய் சம்பந்தப்பட்ட மருத்துவரை நேரில் சென்று சிகிச்சை பெற ஏதுவாக வெளி நோயாளி அட்டை ஒன்று வழங்க உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த எந்த ஒரு நோயாளியும் இங்கு பதிவு செய்யும்போது தனது பெயர், முகவரி, செல்போன் எண், ரத்த வகை போன்ற விவரங்களை அதில் பதிவிட்டு அட்டை ஒன்றை வழங்குவார்கள். அந்த அட்டையை ஒரு முறை வந்தவர்கள் மற்றொரு முறை வரும்போது, மருத்துவர்களை பார்ப்பதற்கான சீட்டு வாங்க வரிசையில் நிற்காமல் நேரடியாக மருத்துவரை சென்று பார்க்க ஏதுவாக இந்த அட்டை உதவியது.
இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆதார் அட்டையையும் நோயாளிகளிடமிருந்து பெற்று, அதனை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அந்த லிங்க் கை நோயாளிகளின் செல்போனுக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த, லிங்க்கை பயன்படுத்தி அடுத்த முறை நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும்போது வரிசையில் நிற்காமல் செல்போனிலேயே எந்த நோய்க்கு எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் போன்ற விவரங்களை பதிவு செய்து நேரடியாக சென்று பார்க்க உதவும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளியின் முழு விபரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்து, அந்த லிங்க் எடுத்து கொடுப்பதற்கு நேரம் ஆவதால் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.சாதாரண ஏழை, எளிய மக்கள் ஆண்ட்ராய்டு போன் இல்லாத பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், புற நோயாளிகளின் அனுமதி சீட்டுக்காக கூடுதலாக கவுன்ட்டர்களை திறந்து, நோயாளிகளை நீண்ட நேரம் நிற்க வைக்காமல் அனுப்ப ஏதுவாக மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
