×

மணலி செட்டிமேடு பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் : குடிநீர் கிடைக்காததால் மக்கள் ஆவேசம்

 

மணலி: மணலி மண்டலத்தில் குடிநீர் கிடைக்காமல் தவித்துவரும் மக்கள், காலி குடங்களுடன் சாலை மறியல் நடத்தினர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம் 17 வது வார்டு செட்டிமேடு பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக சரியாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தண்ணீர் பிரச்னை தீர்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை செட்டிமேடு பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது தங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாதவரம் பால்பண்ணை போலீசாரும் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளும் வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். ‘’பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். ‘’இது போல் பிரச்னை வராது’’ என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதன்காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பொதுமக்கள் கூறுகையில்,’’எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சரியாக குடிநீர் வராமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எப்போதாவது ஒருமுறை வரும் குடிநீரில் புழுக்கள் கலந்துவருவதால் அதனை குடிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்’ என்றனர். குடிநீர்வழங்கல் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘’செட்டிமேடு பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் வினியோகம் செய்யப்பட்டது. பூமியில் நிலத்தடி நீர் அளவு குறைந்துவிட்டதால் அதற்கு பதிலாக மெட்ரோ வாட்டரை வழங்கினோம். தங்களுக்கு மெட்ரோ வாட்டர் வேண்டாம், நிலத்தடிநீர் தான் வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். மெட்ரோ வாட்டரை தடையில்லாமல் வழங்கி வருகிறோம்’ என்றனர்.

Tags : Manali Chettimedu ,Manali ,Chettimedu ,Chennai Corporation ,
× RELATED இந்தியன் வங்கியில் பயங்கர தீ விபத்து: கணினிகள், ஆவணங்கள் எரிந்து சேதம்