×

கர்நாடகாவில் லாரி – எம்யுவி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு; 2 பேர் காயம்

யெல்லாப்பூர்: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் யெல்லாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை-52-ல் உள்ள அரபியில் காட் பகுதி பாலகாரா கிராஸ் அருகே இன்று அதிகாலை 1.30 மணியளவில் லாரியும் எம்யுவி (பல்நோக்கு) வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யெல்லாப்பூர் போலீசார், பலியானவர்களின் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் ஹூப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தார்வாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் எம்யுவி வாகனத்தில் தர்மஸ்தலா மற்றும் சிக்கமகளூரு ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணமாகச் சென்று கொண்டிருந்தனர்.

வாகனத்தை ஓட்டிச் சென்ற சஞ்சீவ், உணவு விநியோக நிறுவனம் ஒன்றில் பகுதிநேர விநியோகப் பணியாளராகப் பணியாற்றி வந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டுநர் சஞ்சீவ், வாகனத்தை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டிச் சென்று, சாலையின் வலதுபுறம் அதிவேகத்தில் திரும்பியதால், அங்கோலாவிலிருந்து வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் எம்யுவி வாகனம் முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் காயமடைந்து உயிர் பிழைத்த சிவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், பிஎன்எஸ் பிரிவுகள் 281 (பொதுச் சாலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்), 125(2) (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் – கடுமையான காயம்) மற்றும் 106(1) (கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Karnataka ,Yellapur ,Uttara Kannada district of Karnataka ,National Highway-52 ,Uttara Kannada district ,Karnataka… ,
× RELATED டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்