சென்னை: விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? உணவுத் தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா? என்று சீமான் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஒருவேளை, கொள்முதல் செய்யப்பட்டாலும் அதனை முறையாகப் பாதுகாத்து, நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வழங்கியதில்லை. ஒரே வயலில் விளைந்த நெல்மணிகளில் தனியார் கடைகளுக்கு வரும் அரிசி தரமாகவும், அரசின் நியாய விலைக் கடைகளுக்கு வரும் அரிசி தரமற்றும் இருப்பதும் ஏன்? இடையில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளும் போதுமானக் கட்டிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் இயங்கி வருவதே அரிசி தரமற்றுப் போவதற்குரிய முதன்மைக்காரணமாகும். ஒரு தகரத்தாலான கூரைகளைக்கூட அரசால் ஏற்படுத்த முடியாதா? நெல்மூட்டைகளை வெட்டவெளியில் கிடத்துவதா? எனக் கேட்டு விவசாயிகள் போராடியும் கூட அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்கு முன்புப் பாதுகாத்து வைக்க வேண்டிய தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு, போதுமான அளவு கட்டிடங்கள்கூட இல்லாமல் சுடுகாட்டில் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது எல்லாம் அரச நிர்வாகத்தின் மோசமான இழிநிலையாகும். முந்தைய ஆட்சிக்காலத்தைப் போலவே, தற்போதைய அரசும் அலட்சியத்தோடு செயல்படுவது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
மழைக்காலங்களில் அரிசி மூட்டைகள் நீரில் நனைந்து, முளைத்து வீணாகி வந்த நிலையில், கோடைக்காலத்தில் தீயில் எரிந்து சாம்பலாவதெல்லாம் அயராத உழைப்பைச் செலுத்தி, நெல்மணிகளை அறுவடை செய்த விவசாயிகளின் உழைப்பை மலினப்படுத்தும் கொடுஞ்செயலாகும். உணவுத்தானியங்களைக்கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாதென்றால், அது அரசா? இல்லை! தரிசா? எனும் கேள்விதான் எழுகிறது.
ஆகவே, விவசாயிகள் விளைவிக்கும் உணவுத்தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டிடங்களை உருவாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசியை தரமாக நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன் என்று சீமான் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
