ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேருந்து பணிமனையில் இருந்து பள்ளி நேரத்திற்கு பெரியபாளையம், ஊத்துக்கோட்டைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி, மற்றும் ஆந்திர மாநிலமான புத்தூர், திருப்பதி, காளஹஸ்தி, நகரி என 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி விட்டு வீடு திரும்பும் மாணவ – மாணவிகள் பேருந்துகள் இல்லாததால் 4.25 மணி முதல் 5.50 வரை நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். பின்னர் செங்குன்றத்திலிருந்து மாலை 6 மணிக்கு வந்த மாநகர பேருந்தில் மாணவர்கள் முண்டியடித்து ஏறிச்சென்றனர். ஊத்துக்கோட்டையில் இருந்து மாணவ – மாணவிகள் பள்ளிக்கு செல்லும் நேரத்திலும், வீடு திரும்பும் நேரத்திலும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்களை ஊத்துக்கோட்டையில் இருந்து செங்குன்றம் வரை இயக்க வேண்டும் என மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில்: ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் படிக்கும் எங்களும் பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வந்தால் குறித்த நேரத்தில் பேருந்துகள் இல்லை. இந்த நேரத்தில் மாநகர பேருந்துகளும் இயக்கப்படுவதில்லை. உள்ளூர் பேருந்துகள் பக்கத்து கிராமங்களுக்கு மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரை ஒரு பேருந்தாவது இயக்கினால் நன்றாக இருக்கும் என்றனர்.
