அட்லான்டா: உலக கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப்16 போட்டியில் அர்ஜென்டினாவிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்ற எகிப்து அணி, ஃபிபா அமைப்பு மற்றும் நடுவர்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அட்லான்டா அரங்கில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், யாருமே எதிர்பார்க்காத வகையில் எகிப்து அணி அடுத்தடுத்து 2 கோல் போட்டு நடப்பு உலக சாம்பியன் அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் யாசர் இப்ராகிம் 15வது நிமிடத்திலும், முஸ்தபா ஸீகோ 67வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
அர்ஜென்டினா அணி ரவுண்ட் ஆப் 16 உடன் மூட்டைகட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்… கிறிஸ்டியன் ரொமெரோ (79’), கேப்டன் லியோனல் மெஸ்ஸி (83’), என்ஸோ பெர்னாண்டஸ் (90’+2’) ஆகியோர் அபாரமாக கோல் அடித்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை எகிப்திடம் இருந்து பறித்தனர். அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், எகிப்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. தங்கள் அணியின் தோல்விக்கு நடுவர்களின் பாரபட்சமான முடிவுகளே காரணம் என எகிப்து அணி நிர்வாகம் தரப்பில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முதல் பாதியில் எகிப்து அணி அடித்த ஒரு கோலை நிராகரித்ததுடன், அர்ஜென்டினா வீரர்கள் தவறிழைத்தபோது ஒரு மஞ்சள் அட்டை கூட காட்டாத நடுவர்கள், எகிப்து அணி வீரரை சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றியது அந்த அணி நிர்வாகத்தை கடும் அதிருப்தியடைய வைத்துள்ளது. பயிற்சியாளர் ஹோஸம் ஹஸன், முன்கள வீரர் முஸ்தபா ஸீகோ இருவரும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டிய நிலையில், எகிப்து கால்பந்து சங்க தலைவர் ஹானி அபோ ரிடா பிபாவிடம் முறைப்படியான புகார் மனுவை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, நடுவர் பிரான்சு நாட்டை சேர்ந்த நடுவர் பிராங்கோயிஸ் லேடக்சியரை உலக கோப்பையில் இருந்தே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கள நடுவர்கள் மட்டுமல்லாது வீடியோ உதவி நடுவர் (வீஏஆர்) தொழில்நுட்பமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கால்பந்து நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் ஃபிபாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிந்து வருகின்றனர்.
