×

வடாரண்யேஸ்வரர் கோயிலில் 100 கால் கல்மண்டப மேற்கூரை இடிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலாக விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால், உள்பிரகாரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சோழர் காலத்தில் கட்டப்பட்ட 100 கால் கல்தூண் மண்டபம் வரலாற்றும் சாட்சியாக இன்றுவரை விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவில் நடராஜருக்கு பல்வேறு அபிஷேக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். எனினும், இந்த 100 கால் கல்மண்டபத்தை திருத்தணி கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காமல், அம்மண்டபத்தில் ஏராளமான வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

கடந்த மாதம் 25ம் தேதி இரவு 100 கால் மண்டபத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வைக்கோல் கட்டுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில், அந்த கல்மண்டப தூண்களில் செதுக்கப்பட்டு இருந்த சுதை சிற்பங்களும் பெரும்பாலான கல்தூண்களும் பலத்த சேதமடைந்தன. இவ்விபத்து நடைபெற்ற 13 நாட்களில், நேற்று சேதமடைந்த 100 கால் கல்மண்டபப் பகுதிகளை தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில், 100 கால் கல்மண்டபத்தின் மையப் பகுதியில் சுண்ணாம்பு மற்றும் வெள்ளை பாறைகளால் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை தளம் முற்றிலும் இடிந்து விழுந்தது. மேலும், மேற்கூரையில் இருந்த வெள்ளை பாறைகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. இதனால் அந்த 100 கால் கல்மண்டபம் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் அம்மண்டபத்தை முழுமையாக மறுசீரமைத்து, அதன் பழமை மாறாமல் பராமரித்து பாதுாக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Vadaranyeswarar temple ,Tirutani ,Tiruvalankadu Vadaranyeswarar temple ,Murugan ,Rajagopuram ,Chola ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு