×

ரூ.7.2 கோடியில் வள்ளிமலை கோயில், சமணர் குகைகள் சுற்றுலாத் தலமாகிறது: திமுக ஆட்சி திட்டம் நடைமுறைக்கு வருகிறது

 

வேலூர், ஜூலை 8: அலங்கார நுழைவு வாயில், சிறிய பூங்காவுடன் ரூ.7.2 கோடியில் வள்ளிமலை கோயில், சமணர் குகைகள் சுற்றுலாத்தலமாகிறது. திமுக ஆட்சி திட்டமிடலை, தற்போதைய அரசு கையில் எடுத்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் மலைமேல் முருகனின் குகைக்கோயிலும், மலையடிவாரம் மற்றும் மலை மீது ஏராளமான சமணர் படுக்கைகளுடன் கூடிய குகைகள், சிற்பங்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு குகையும் 40க்கு 20 அடி அகலம் நீளம் கொண்டதாகவும், 7 முதல் 10 அடி உயரம் கொண்டதாகவும் அமைந்துள்ளன. சிற்பங்களுடன் மருந்து அரைக்கும் பாறையில் குடையப்பட்ட உரல் வடிவ குழிகளும், அம்மிகளும் கூட குகைகளில் உள்ளன.

மவுரிய பேரரசுக்கு பின்னர் அன்றைய பாடலிபுத்திரம் எனப்படும் இன்றைய பீகாரில் இருந்து சமண துறவிகள் பலர் இங்கு வந்தனர். கற்படுக்கைகள் ஆந்திராவின் சாதவாகனர் காலத்தில் செதுக்கப்பட்டவை. அதில் ஒரு குகையில் மொத்தம் 5 கல்வெட்டுகள் அமைந்துள்ளன. அதில் ஒன்று 8ம் நூற்றாண்டை சேர்ந்தது. பொ.ஆ. 870ல் சோழர்களிடம் இருந்து கங்க மன்னன் 2ம் ராசமல்லன் இப்பகுதியை கைப்பற்றினார். அவரது காலத்தில் சமண சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. சமண துறவிகளால் நிறைந்திருந்த வள்ளிமலையின் ஒரு குகைதான் முருகன் கோயிலாக உருவானது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க வள்ளிமலையில் அமைந்துள்ள சமணர் குகைகளை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் பரவியுள்ள தமிழ், கன்னட சமணர்களும், வடமாநில ஜெயினர்களும் வந்து பார்த்து ெசல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அதற்ேகற்ப கடந்த திமுக ஆட்சி காலத்தில் வள்ளிமலையை சுற்றுலா தலமாக்கும் திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வள்ளிமலை கோயில் அமைந்த பகுதிக்கு தனியாகவும், வள்ளிமலையை ஒட்டிய குகைகளை சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கான மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்தை சுற்றுலாத்துறை கையில் எடுத்துள்ளது. இதில் வள்ளிமலையை ஒட்டிய குகைகளுக்கு செல்ல கைப்பிடியுடன் கூடிய படிகளும், மலையடிவாரத்தில் சிறிய அளவில் பூங்காவும், மலைமேல் ஒவ்வொரு குகைக்கும் ெசல்ல பாதைகளும் அமைக்க ரூ.3.5 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் வள்ளிமலை முருகன் கோயில் அமைந்துள்ள பகுதியில் அலங்கார நுழைவு வாயில், சுற்றுலா பயணிகளுக்கான அறைகள், பூங்கா, குகைகளை சுலபமாக பார்த்து வரும் வகையில் பாதைகள் என ரூ.3.7 கோடியில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vallimala Temple, Jaman Caves ,DMK ,Vellore ,Vallimala Temple, ,Jaman Caves ,Vallimala ,Katpadi ,Lord Murugan ,
× RELATED 2வது திருமணம் செய்த காதல் கணவன் மீது மனைவி புகார்