அமைச்சர் புஸ்சி ஆனந்த் ஆய்வுக்கூட்டத்தை விசிக அமைச்சர், 4 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் புஸ்சி ஆனந்தின் முதல் ஆய்வுக்கூட்டத்தை விசிக அமைச்சர் மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். பாமக எம்எல்ஏக்கள் 2 பேர் மட்டும் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நேற்று முதல் முறையாக கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் திண்டிவனம் விசிக எம்எல்ஏவும், சமூக நீதி அமைச்சருமான வன்னியரசு இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதேபோல் மயிலம் அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம், திருக்கோவிலூர் அதிமுக எம்எல்ஏ பழனியப்பன் மற்றும் விழுப்புரம் திமுக எம்எல்ஏ லட்சுமணன், வானூர் திமுக எம்எல்ஏ திராவிடமணி ஆகிய 4 பேரும் அமைச்சர் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தனர்.

ஏற்கனவே இந்த மாவட்டத்தில் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்ற விசிக எம்எல்ஏ வன்னியரசு சமூக நீதி அமைச்சராக உள்ள நிலையில் இந்த மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக்கப்படாமல் வெளிமாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டதால் தவெக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எம்எல்ஏ என்ற முறையில் கூட அமைச்சர் வன்னியரசு பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், பாமகவை சேர்ந்த செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி எம்எல்ஏக்கள் கணேஷ்குமார், சிவக்குமார் பங்கேற்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் 13 ஒன்றிய சேர்மன்கள் மற்றும் 3 நகராட்சி, 7 பேரூராட்சி சேர்மன்களும் கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்டம் தொடங்கியதுமே தவெக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் வந்து விட்டனர். ஒவ்வொரு துறைகள் வாரியாக அமைச்சர் திட்டங்களையும், வளர்ச்சி பணிகளையும் கேட்டறிந்து கொண்டிருந்த நிலையில் தவெக நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றதால் அதிகாரிகள் அப்செட்டாகினர்.

அரசு நிகழ்ச்சிகள், அமைச்சர் ஆய்வுக்கூட்டங்களில் பதவிகளில் இல்லாத தவெக நிர்வாகிகள் பங்கேற்பது தொடர்கிறது. ஆளுநரிடம் அனைத்து கட்சியினர் முறையிட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் அக்கட்சி தலைமை எடுக்காமல் உள்ளதாகவும், கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் புஸ்சி ஆனந்த் நிகழ்ச்சியிலேயே இந்த விதிமீறல்கள் நடைபெற்று வருவதால் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

* ஹெல்மெட் போடாமல் பைக்கில் அமைச்சர் ஆய்வு
விழுப்புரத்தில் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் புஸ்சி ஆனந்த் நேற்று சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு வந்தார். விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தவெக முதல் மாநாடு நடந்த பகுதிக்கு வந்ததும் அங்கு காரிலிருந்து இறங்கினார். தொடர்ந்து தவெக நிர்வாகியின் பைக் பின்னால் உட்கார்ந்து சென்று மாநாடு நடந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி கும்பிட்ட பின்னர் அப்பகுதியில் நடைபெறும் விபிஜி ராம்ஜி திட்டத்தை ஆய்வு செய்து மக்களுடன் கலந்துரையாடினார்.

பைக் ஓட்டிச்சென்ற நிர்வாகியும், பின்னால் உட்கார்ந்து சென்ற அமைச்சரும் ஹெல்மெட் அணியவில்லை. சமூகவலைதளத்தில் அமைச்சர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்று ஆய்வு செய்யும் வீடியோவை பதிவிட்டு போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல் தற்போது வரை புஸ்சி ஆனந்த் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வது தொடர்கதையாகி வருகிறது. இவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

* முற்றுகையிட்ட பொதுமக்கள்: விரட்டியடித்த அதிகாரிகள்
புஸ்சி ஆனந்த் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் விழுப்புரம் அருகே ராமானுஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் கிராமத்தில் உள்ள பொது இடம் தனிநபர் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

விசாரணைக்கு அழைத்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக கூறினர். அப்போது அதிகாரிகள் அமைச்சர் கூட்டம் நடக்கிறது. உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கிறோம். இப்போது செல்லுங்கள் என்றனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: