சென்னை: விஐடி சென்னையில் நடப்பு கல்வியாண்டுக்கான சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவ-மாணவியர்களை வரவேற்கும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், விஐடி சென்னையின் இணை துணை வேந்தர் தியாகராஜன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், சட்டத்துறை டீன் ரபிராஜ், டீன் அகாடமிக்ஸ் நித்திய தர்ஷினி, டீன் அகாடமிக் ரிசர்ச் நய்முல்லா கான், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் பேசியதாவது: மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவம் உடையவர்கள், எனவே, மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்து சிறந்த நிலையை அடைய வேண்டும். சட்டத் துறையில் முன்னேற விரும்பும் மாணவர்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ளும் மனப்பாங்குடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரியதை வழங்குவதே நீதி என்றாலும், நடைமுறையில் அது மிகவும் சிக்கலானது.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பல அடுக்குகளைக் கொண்டவை என்பதால், ஒரு வழக்கறிஞர் பல கோணங்களில் அணுக வேண்டும். அவ்வாறு அணுகும் போது பல தீர்வுகள் கிடைக்கும். அதில் சிறந்ததை தேர்வு செய்வதே நல்ல வழக்கறிஞரின் பணியாகும். சட்டத்துறையில் குறுக்கு வழிகள் என்று எதுவும் இல்லை, தொடர்ந்து முயற்சி மற்றும் அனுபவத்தின் மூலம் மட்டுமே முன்னேற முடியும், தோல்வி அடைந்து விட்டால் துவண்டு விடாமல் அதை அனுபவத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் வெற்றி அடையலாம் என்றார்.
கவுரவ விருந்தினராக உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சாரா சன்னி, எக்ஸ்ப்ளோ பேமெண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் மூத்த சட்ட ஆலோசகரும் விஐடி சென்னை சட்டக்கல்லூரியின் முன்னாள் மாணவியுமான மேகா விஸ்வநாதன் பங்கேற்றனர்.
