×

கனமழையால் நிலச்சரிவு.. மும்பை – புனே ரயில் சேவை பாதிப்பு; 16 ரயில்கள் ரத்து

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் இடைவிடாத கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக நிலச்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததால், மும்பை-புனே இடையேயான ரயில் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

கர்ஜத் – லோனாவாலா மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மும்பை புனே இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் இந்திராயணி எக்ஸ்பிரஸ், டெக்கான் குயின் உள்ளிட்ட பல முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; 9 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியிருக்கிறார்.

அதேபோல மும்பை, புனே, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ளன. இதனையடுத்து மும்பை – புனே விரைவுச் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வாகனப் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags : MUMBAI ,Pune ,MAHARASHTRA ,
× RELATED கரூர் வழக்கு குறித்து ஆதவ் அர்ஜுனா...