மதுரை, ஜூலை 6: மதுரை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் நியமனம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க முடிவு செய்து அதன் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் அலுவலர்களை நியமனம் செய்து அவர்களுக்கு தேவையான பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பேரில் மதுரை மாவட்டத்தில் இன்று ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை மூன்று நாட்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த அலுவலர்கள் நியமனத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது என பல்வேறு ஆசிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்பொழுது யார், யார் அந்த பணியை செய்தார்களோ அவர்களையே மீண்டும் இந்த முறை பணி நியமனம் செய்துள்ளார்கள். இதில் பலர் ஓய்வு பெற்று விட்டார்கள், பலர் பதவி உயர்வு பெற்று சென்று விட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட கல்வி அலுவலரிடம் ஆசிரியர்கள் விவரம் பற்றி கேட்டு பெறாமல் கடந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பில் யார், யார் ஈடுபட்டார்களோ அவர்களையே மீண்டும் நியமனம் செய்துள்ளனர். ஏற்கனவே செய்தவர்கள் தான் மீண்டும் இப்பணியை செய்ய வேண்டுமா? வேலை பளுவை வேலை செய்தவர்களுக்கே மீண்டும் திருப்பி தர வேண்டுமா?. மதுரை திருமங்கலத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளனர்.
அதில் பல குளறுபடிகள் உள்ளது. கேட்டதற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வந்த பட்டியலின் அடிப்படையில் நாங்கள் அனுப்பி உள்ளோம் என கூறப்படுகிறது. அந்த பட்டியலில் வரிசை எண் மூன்றில் பரமேஸ்வரன் என்ற பெயர் உள்ளது. அப்படி ஒரு நபர் அந்த பள்ளியில் பணி செய்யவில்லை. மேலும் வரிசை எண் நான்கில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியை பட்டதாரி ஆசிரியை. ஆனால் இடைநிலை ஆசிரியை என்று உள்ளது. எனவே, இந்த அலுவலர் நியமனத்தை ரத்து செய்துவிட்டு புதியதாக நியமனம் செய்யுமாறு கலெக்டருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
