×

மருதடி கிராமத்தில் நெட்வொர்க் கிடைக்காமல் அல்லாடும் மக்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

பாடாலூர், ஜூலை 6: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ளது மருதடி கிராமம். இந்த கிராமத்தை சுற்றி மருதடி, ஈச்சங்காடு, நாட்டார்மங்கலம் என பல்வேறு கிராமங்கள் உள்ளன. மலைகள் சூழ்ந்த பகுதியான மருதடி கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் செல்போன் கோபுரங்கள் இல்லை. இதனால், இணைய தொடர்பு சரிவர கிடைக்காததால், இப்பகுதி மக்கள் செல்போன் மற்றும் இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் அல்லாடுகின்றனர். இங்குள்ள அரசு அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆவின் பால் நிலையம், பள்ளிக்கூடம் ஆகியவற்றிலும் இணைய தொடர்பு கிடைக்காததால்,

அங்கு வழங்கப்படும் சேவைகளை பெற இப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மருதடி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறியது: மருதடி கிராமத்தில் இணைய வழி தொலைதொடர்பு கிடைக்காததால், இப்பகுதி வசிக்கும் பொதுமக்கள் 3 கி.மீ தொலைவில் உள்ள நாரணமங்கலத்திற்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, மருதடியில் செல்போன் கோபுரம் அமைத்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இப்போது இணையம் வழியாக பல்வேறு செயல்பாடுகள் நடைபெறுவதால், அரசு அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் எங்கள் ஊரில் செல்போன் கோபுரம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Maruthadi ,Patalur ,Alathur taluk ,Perambalur district ,Eechankadu ,Nattarmangalam ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...