×

அரியலூரில் கணக்கில் வராத ரூ.5.61 லட்சம் பறிமுதல்: நகராட்சி ஆணையர் உள்பட 11 பேர் மீது வழக்கு

 

அரியலூர், ஜூலை 6: அரியலூர் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் அண்மையில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.5.61 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நகராட்சி ஆணையர் உள்பட 11 பேர் மீது காவல் துறையினர் நேற்று வழக்குப் பதிந்தனர். மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் கவிதா, சரவணன் ஆகியோர் தலைமையில் 7 பேர் கொண்ட காவல் துறையினர், கடந்த 3 ஆம் தேதி மாலை அரியலூர் நகராட்சி அலுவலகத்தினுள் அதிரடியாக நுழைந்து, கதவுகளை மூடி அனைத்து கோப்புகளையும், ஆவணங்களையும் சோதனை செய்தனர். அலுவர்களிடம் தீவிர விசாரணையும் மேற்கொண்டனர். இதில், அலுவலர்களின் கைப்பேசி ஜிபே யில் ரூ.5.47 லட்சமும், ரூ.14 ஆயிரம் ரொக்கமும் கணக்கில் காட்டப்படாமல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்தத் தொகையை பறிமுதல் செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், சென்னை, அசோக் நகர், 12 ஆவது அவென்யூ, பாலாஜி கருடாத்ரி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.எஸ் மெசர்ஸ் பிரிகாப் ப்ராஜெக்ட்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் என்ற குடிநீர் ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர் ஹரிபிரபு என்பவரிடமிருந்து, நகராட்சி அலுவலக ஊழியர்கள் தங்களது கூகுள் பே செயலி மூலமாக 5 லட்சத்து 47 ஆயிரத்து 275 பணத்தைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து துணை ஆய்வுக்குழு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், நகராட்சி ஆணையர் உள்பட அலுவலர்கள் 11 பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் நேற்று வழக்குப் பதிந்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Ariyalur ,District Anti-Corruption and Vigilance Unit police ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...